விழா கோலம் பூண்ட அயோத்தி!. மின்னொளியில் ஜொலிக்கும் ராமர் கோவில்!. வைரலாகும் வீடியோ!
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கும் நிலையில் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் மின்னொளியால் ராமர் கோவில் ஜொலிக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆன்மிக தலைவர் தலாய் லாமா, யோகா குரு பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பிரபல தொழிலதிபர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி உள்பட ஏராளமான பிரபலங்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் ஓவியம் மற்றும் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அழகு மிளிர காணப்படுகின்றன. ரம்பாத், பக்தி பாதை மற்றும் சுக்ரீவா கோட்டையில் அலங்காரம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சுவர்கள் டெரகோட்டா மற்றும் நுண்ணிய களிமண் சுவரோவிய கலைப்பொருளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் அவை ஒளி வீசுகின்றன. அது காண்போரை கவர்ந்திழுத்து பரவசத்திற்கும் உள்ளாக்குகிறது. ஒட்டுமொத்த அயோத்தியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
500 वर्षों के तप की परिणति।
The Sacred Garbhagriha of Prabhu Shri Ramlalla Sarkar is ready in all its glory to welcome the aaradhya of millions of Ram Bhakts across the world. pic.twitter.com/WWJjWc41va
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) January 8, 2024
தர்ம பாதையின் ஓரங்களில் உள்ள சுவர்களில் ராமாயண சம்பவங்களை சித்தரிக்கும் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன. சுவர்களில் திரேதாயுகத்தை நினைவுபடுத்தும் கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்படுகின்றன. சாலையின் இருபுறமும் உள்ள நிறுவனங்கள், கட்டிடங்கள், கடைகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. சுமார் ரூ.1800 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த கோயிலில் 12 மணி நேரத்தில் 70 முதல் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோவை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகியுள்ளது.
ஸ்ரீ ராமர் சிலையின் நீளம் மற்றும் நிறுவப்பட்ட உயரம் இந்தியாவின் பிரபல விண்வெளி விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி, சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 9 ஆம் தேதி, சூரிய பகவான் மதியம் 12 மணிக்கு ராமரின் நெற்றியை தனது கதிர்களால் தொடுவார் என்று ராமர் கோவிலும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு முக்கிய பிரமுகர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பாபர் மசூதிக்காக வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி அழைக்கப்பட்டுள்ளார். இக்பாலின் மகள் ஷாமா பர்வீன் கூறுகையில், ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் அழைப்பை விடுத்துள்ளனர்.