|

Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான் – விட்டுக்கொடுக்காமல் பேசும் மாலத்தீவு சுற்றுலா தொழிற்சங்கம்!

பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதால் மாலத்தீவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கருத்துகளுக்கு, அந்நாட்டு சுற்றுலாத் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு சுற்றுலா தொழிற்சங்கம்:

பிரதமர் மோடியின் லட்சத்தீவுகள் பயணத்தை விமர்சித்து, மாலத்தீவுகளின் அமைச்சர்கள் கூறிய கருத்துகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, மோடிக்கு எதிராக கருத்து கூறிய 3 பேரை மாலத்தீவு அரசு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் கூறிய கருத்துகளை வன்மையாக கண்டிப்பதாக” மாலத்தீவுகள் சுற்றுலாத் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

”இந்தியா தான் முதல் ஆதரவாளர்”

இதுதொடர்பான அறிவிப்பில், “எங்கள் வரலாறு முழுவதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இந்தியா தான் எப்போதுமே முதல் ஆதரவாளராக இருந்து வருகிறது. அந்நாட்டு அரசாங்கமும் இந்திய மக்களும் எங்களுடன் பராமரித்து வரும் நெருங்கிய உறவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு மாலத்தீவின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் இந்தியா தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இந்தியா மாலத்தீவிற்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. தொடர்ந்து சிறந்த பங்களிப்பாளர்களின் தரவரிசையிலும் முன்னணியில் உள்ளது” என மாலத்தீவுகள் சுற்றுலாத் தொழில் சங்கம் கூறியுள்ளது.

மோடி லட்சத்தீவு பயணமும், வெடித்த சர்சையும்:

கடந்த வாரம் தமிழகம் வந்த பிரதமர் மோடி அதைதொடர்ந்து லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அங்குள்ள கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டார். மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவுகளை முன்வைக்க இந்தியா முயற்சிப்பதாக பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை, மாலத்தீவின் அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதுதான் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய நட்சத்திரங்கள் பலரும் இனி மாலத்தீவுகள் செல்லப்போவதில்லை எனவும், ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய தொடங்கினர். இதனை தொடர்ந்து, மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களையும், மாலத்தீவுகள் அரசு பதவியில் இருந்து நீக்கியது. அதைதொடர்ந்து, ”சமூக வலைதளங்களில் கூறியது எங்களது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அரசாங்கத்தின் கருத்துகள் அல்ல” என பதவியை இழந்த 3 அமைச்சர்களுமே விளக்கம் அளித்தனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடான மாலத்தீவுகள், மோடி அரசாங்கத்தின் SAGAR’ (பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் அண்டை நாடுகளின் முதல் கொள்கை’ போன்ற அதன் முன்முயற்சிகளில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *