சென்னையில் பரபரப்பு… வருமான வரித்துறை அதிரடி சோதனை!
அதிகாலையிலேயே பரபரப்பாக சென்னையில் இன்று பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் மணல் குவாரி குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள், நகை கடைகள், வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று காலை முதல் சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி. நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை நிறைவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.