பழனி முருகன் கோயில் அதிசய நெல்லி மரம் பற்றி தெரியுமா?
நீா், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் ஐம்பூதங்களையும் மலை, கடல், ஆறு என அனைத்தையும் தெய்வமாக கருதினா். மரங்களை தலவிருட்சமாக அடையாளம் காட்டி, இயற்கையை பாதுகாக்கும் பணியை முன்னோர்கள் செய்தனா். அந்த வகையில் மலை, தலை விருட்சம் என இரண்டிலும் சிறப்பு மிக்க தலம் பழனி.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி பால தண்டாயுதபாணி கோயில் உலக புகழ் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இதுதவிர வார நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இத் திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
பழனி தண்டாயுதபாணியின் திருவுருவம் ஒன்பது வகையான சித்தமருந்துகளால் ஆனது. இதன் மீது பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தருவா். மலைவாழைபழம், பேரிச்சம்பழம், கற்கண்டு, கருப்பட்டி, தேன் என்னும் ஐந்து அமிர்தங்களால் ஆனது பஞ்சாமிர்தம். சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
கைலாயத்தில் சிவகிரி, சத்தகிரி என்ற மலைச் சிகரங்கள் இருந்தன. அவற்றை பெயர்த்து பொதிகையில் தங்கியுள்ள அகத்தியரிடம் வழங்குமாறு இடும்பாசுரனிடம் சிவபெருமான் கட்டளையிட்டதாக வரலாறு கூறுகிறது. காவடியைப் போல தான் தோளில் அவற்றை சுமந்து வந்த அசுரன் வரும் வழியில் களைப்படைந்தான். பழனியை அடைந்ததும் அவற்றை இறக்கி வைத்த போது முருகப் பெருமானால் தடுக்கப்பட்டான். அந்த சிகரங்களே பழனி, இடும்பன் மலையாக உள்ளன.
ஒருமுறை பூமியில் பிரளயம் ஏற்பட படைப்புக் கடவுளான பிரம்மா அதிர்ச்சியடைந்தார். அப்போது அவரது வாயில் ஊறிய உமிழ்நீர் நெல்லிமரமாக மாறியது என்றும் ஒருமுறை தவத்தில் ஆழ்ந்த பிரம்மா சிந்திய ஆனந்தக் கண்ணீரில் இருந்து நெல்லி மரம் தோன்றியது என்றும் கூறுவா்.
பரணி நட்சத்திரத்திற்கு உரிய மூலிகை பெருநெல்லி மரம். இதன் தாவரவியல் பெயர் பில்லாந்தஸ் எம்ப்லிக்ஸ். கொத்துக்கொத்தாக பூத்துக் காய்க்கக் கூடிய இந்த மரங்கள் பில்லாந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். ரசபலம், சீதுபலம், தாத்திரிபலம், சிவம், ஆமலகி, திருஷ்ய பலம், சிரிபலம், வசம், பஞ்சாட்சர வருஷி, திரிதோஷ சமனி என நெல்லி மரத்திற்கு பல பெயர்கள் உண்டு.