கோவா: 4 வயது குழந்தை கொலை-பெங்களூர் பெண் சிஇஓ கைது-உலகின் AI பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்!
பெங்களூர்: கோவாவில் ஹோட்டல் அறையில் 4 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபர் சுசானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவையும் கோவாவையும் ஒரு சேர அதிர வைத்துள்ளது 4 வயது ஆண் குழந்தையின் படுகொலை. The Mindful AI Lab என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுசானா சேத். செயற்கை நுண்ணறிவு- Artificial intelligence துறை சார்ந்த நிறுவனம் இது. இந்நிறுவனம் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்னர் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணிபுரிந்தார் சுசானா சேத்.
கோவாவில் 4 வயது மகனுடன் சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கி இருந்தார். சுசானா சேத். ஆனால் அந்த அறையை காலி செய்யும் போது குழந்தை இல்லாமல் வெளியேறி இருக்கிறார் சுசானா சேத். இதனால் கோவா அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் சுசானா சேத் மீது சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்த விசாரணையில் சுசாசான சேத் ஹோட்டலை விட்டு கிளம்பிய போது தனியாகவே பயணித்தார் என கால் டாக்சி ஓட்டுநரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
பின்னர் கர்நாடகா போலீசாருக்கு கோவா போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் சித்ரதுர்காவில் நேற்று சுசானா சேத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது 4 வயது குழந்தையை கொன்று பேக் ஒன்றில் உடலை எடுத்து வந்ததாக ஒப்புக் கொண்டார் சுசானா சேத். இதனையடுத்து சுசானா சேத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.