ஸ்டீவ் ஸ்மித் முதல் ஹேசில்வுட் வரை… ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத சர்வதேச வீரர்கள்…
சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், முன்னணி வீரர்கள் சிலர் நேற்று நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அணி நிர்வாகத்தால் கண்டுகொள்ளப்படவில்லை. அதிக விலைக்கு அணியில் எடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டவர்கள் விலை போகாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தம் 72 வீரர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ரூ. 24.75 கோடிக்கும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 20.50 கோடிக்கும் வாங்கியுள்ளது.
சென்னை அணியை பொருத்தவரையில் நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்கு எடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் சமிர் ரிஸ்வி சென்னை அணியால் ரூ. 8.40 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
அதே நேரம் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடியபோதிலும், ஐபிஎல் ஏலத்தில் அணி நிர்வாகத்தால் சில வீரர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டீவன் ஸ்மித்திற்கு ரூ. 2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
இதேபோன்று, இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட், பவுலர் அடில் ரஷீத், ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்லீஷ், ஹேசல்வுட், தென்னாப்பிரிக்காவின் தப்ரேஸ் ஷம்ஸி, நியூசிலாந்தின் ஃபின் ஆலன், மிட்செல் பிரேஸ்வெல், காலின் மன்றோ, கைல் ஜேமிசன், தென்னாப்பிரிக்காவின் வாண்டர் டசன் உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் ஐபிஎல் அணிகளால் கண்டுகொள்ளப்படவில்லை.
இதற்கு வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படை தொகை, காயம், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச போட்டிகள் உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகின்றன.