First Gay PM: பிரான்ஸ் பிரதமராகும் இளம் தன்பாலின ஈா்ப்பாளா்..யார் இந்த கேப்ரியல் அட்டல்..!
பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் கேப்ரியல் அட்டலை, அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளாா் அதிபர் இமானுவேல் மேக்ரான். இதன் மூலம் 34 வயதான கேப்ரியல், பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் பிரதமா் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளாா். அதோடு பிரதமராக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற சிறப்பையும் அவர் பெறுவார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் பதவி வகித்து வரும் நிலையில், சமீபத்தில் குடிபெயா்வுச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தங்களால் அவரது ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. இதையடுத்து, தனது மீதமுள்ள ஆட்சி காலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து பிரான்ஸ் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற முயற்சியில் இம்மானுவேல் ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளாா்.
இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போா்ன் தனது பதவியை கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்தாா். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் கேப்ரியல் அட்டலை, அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளாா் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினா் பேட்ரிக் விக்னல், கேப்ரியல் அட்டல் பிரான்சின் இளைய பிரதமராகவும், வெளிப்படையாக ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் முதல் நபராகவும் இருப்பார் என்று தெரிவித்துள்ளாா்.