ராமர் கோவில் திறப்பு விழா; அமெரிக்காவில் மோடிக்கு விசா கிடைக்க உதவிய டாக்டர் உள்பட 100 வெளி நாட்டவர்களுக்கு அழைப்பு
2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நரேந்திர மோடிக்கு விசா அனுமதிக்காக வற்புறுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர், இண்டியானாவில் உள்ள நோக்கியா பெல் ஆய்வகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர், நார்வே எம்.பி, நியூசிலாந்து விஞ்ஞானி, ஃபிஜி தொழிலதிபர் மற்றும் கரீபியனில் இந்து பள்ளிகளை நிறுவிய புனிதர்கள். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச விருந்தினர்களில் இவர்களும் அடங்குவர்.
அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள், விருந்தினர் பட்டியலில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து 5 பேரும், தென் கொரியா, மலேசியா மற்றும் இங்கிலாந்தில் இருந்து தலா மூன்று பேரும், ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இருந்து தலா இரண்டு பேரும் அழைக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளில் தலா ஒரு அழைப்பாளர் உள்ளனர்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடியின் விசாவை அனுமதிக்குமாறு அமெரிக்க அரசாங்கத்துடன் வற்புறுத்திய டாக்டர் பாரத் பராய் முக்கிய விருந்தினர்களில் ஒருவர். அதுவரை, மோடி அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 10 ஆண்டு விசா தடையை எதிர்கொண்டார்.
பா.ஜ.க.,வின் தீவிர ஆதரவாளரான டாக்டர் பராய் அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் பல கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்துள்ளார். இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் அவர் பணியாற்றியுள்ளார்.