சியானா வன்முறை வழக்கு : குற்றம் சாட்டப்பட்டவருக்கு பா.ஜ.க மண்டல தலைவராக பொறுப்பு
2018 சியானா பசுவை கொன்றதாக கூறி ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சச்சின் அஹ்லாவத், உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் நகரின் பாஜக மண்டலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயதான அஹ்லாவத் புலந்த்ஷாஹரில் உள்ள பிபி நகர் மண்டல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் 31 மண்டல தலைவர்களில் இவரும் ஒருவராவார்.
சியானா கலவரம் தொடர்பான வழக்கில், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அஹ்லாவத் மீது கலவரம், பொது ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தத, அவரை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற வன்முறையில் சம்பவத்தில், சியானா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே பாஜக மண்டல தலைவராக பொறுப்பேற்றது குறித்து திங்களன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய சச்சின் அஹ்லாவத், இந்த வழக்கில் தான் பொய்யாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது கிராமமான மஹாவில் சம்பவம் நடந்ததால் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நான் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது நான் பாஜகவின் சியானா மண்டல செயலாளராக இருந்தேன். நான் தூரத்தில் நின்று போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன், அந்த இடத்தில் இருந்த சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அதில் நான் இருந்ததால் போலீசார் என்மீது வழக்கு பதிவு செய்தனர். என்னைப் போலவே எனது கிராமத்தில் வசிக்கும் பலர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.