சர்வதேச விழாவில் வெற்றிமாறன், சீனு ராமசாமி படங்கள் ; திரைக்கே வராத திரைப்படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்!
புனேவில் நடைபெறவிருக்கும் 22 வது சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனு ராமசாமியின் திரைப்படங்கள் இடம் பெற உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சர்வதேச திரைப்பட விழா 22 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. புனே சர்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு மொழி திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வரும் ஜனவரி 18 முதல் 25 ஆம் தேதி வரை புனே திரைப்பட விழா நடைபெற உள்ளது. கோலகலமாக நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில், இந்தியா சார்பில் 14 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
அதில் தமிழில் இருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் திரையிடப்பட உள்ளது.
அதே போல் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இடி முழக்கம் என்ற திரைப்படமும் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.