Vijay – விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது விஜய் மீது காலணி வீச்சு.. விஷால் சொன்ன நச் பதில்
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேராக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்தி முடித்துவிட்டு சென்ற அவர் மீது காலணி வீசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சூழலில் அதுகுறித்து விஷால் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த்துக்கு கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனையடுத்து அரசியல், சினிமா ஆகிய தளங்களிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் அவ்வப்போது தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் திடீரென மீண்டும் அவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு அளித்த சிகிச்சை பலனளித்து வீடு திரும்பினார்.
உயிரிழப்பு: வீடு திரும்பிய கையோடு தேமுதிகவின் பொதுக்குழுவில் கலந்துகொண்டார். அந்த சமயத்தில் அவருக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை. இதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் தள்ளியது. பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் சாரை சாரையாக சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தனர்.
விஜய் அஞ்சலி: சாமானியர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் விஜய்யும் நன்றி மறக்காமல் நேராக வந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்கள் கலங்கியபடி கேப்டனின் உடலை பார்த்துக்கொண்டிருந்த விஜய்யை கவனித்த அங்கிருந்தவர்கள் உருகிப்போய் நின்றனர். தனது வளர்ச்சிக்கு முக்கியமானவரை விஜய் மறக்காமல் இருக்கிறாரே என பேசிக்கொண்டனர்.
செருப்பு வீச்சு: கண்ணீர் அஞ்சலியை செலுத்திவிட்டு விஜய் தனது காரை நோக்கி கூட்டத்தில் திணறியபடி வந்தார். அந்த சமயத்தில் யாரோ அவர் மீது காலணியை வீசியதாக கூறப்பட்டது. அதுதொடர்பான வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வெளியானது. ஆனால் அது எடிட் செய்யப்பட்டது என்று விஜய் ரசிகர்கள் கூறிவந்தனர். அதேசமயம் விஜய் மீது காலணி வீசப்பட்டதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இவ்விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது.
விஷால் கருத்து: இந்நிலையில் விஜயகாந்த் உயிரிழந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் அப்போது நேராக வர முடியாத விஷால் நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருக்கும் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு வந்தார். அவருடன் நடிகர் ஆர்யாவும் வந்தார். அஞ்சலி செலுத்திவிட்டு அங்கு வைத்து அன்னதானம் வழங்கினார் விஷால். அதனை முடித்துவிட்டு நேராக விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்தார் விஷால்.