சிக்ஸ்.. சிக்ஸ்.. அதெல்லாம் இல்ல.. சிக்ஸ் கேட்டு அலப்பறை செய்த விஜய்!

சென்னை: வாரிசு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் களத்தில் தனது டீமுக்காக சிக்ஸ் கேட்டு செல்ல சண்டை போடும் வீடியோ ஒன்றை பாடலாராசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபலங்கள் ஷூட்டிங்கின் போது கிடைக்கிற கேப்பில் ஏதாவது கேம் விளையாடுவது வழக்கம் அந்த வகையில், படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில், த்ரிஷா,அர்ஜூன்,சஞ்சய் தத், கௌதமம் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் வந்தாலும் படம் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாக்ஷி சௌத்ரி நடித்து வருகிறார். மேலும், பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, பிரேம்ஜி, வைபவ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
விறுவிறுப்பான படப்பிடிப்பு: தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் என இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதி வரை கோவளத்தில் நடைபெறும் என்றும், இதை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட்டு படத்தை மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியிடும் முடிவில் வெங்கட் பிரபு இருப்பதாக கூறப்படுகிறது.
சிக்ஸ்..சிக்ஸ் தான்: இந்நிலையில், நடிகர் விஜய் வாரிசு படப்பிடிப்பின் போது கிரிக்கெட் களத்தில் சிக்ஸ் கேட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்த வாரிசு திரைப்படம் ஹைதராபாத்தில் அதிக நாட்கள் ஷூட்டிங் செய்யப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய நடிகர் விஜய், பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்சரை வெறும் பவுண்டரி என எதிர் அணியினர் சொன்னதுமே, நீயும் அதே இடத்துல தான் அடிச்சு சிக்சர்ன்னு சொன்ன, இதுவும் சிக்சர் தான் என செல்ல சண்டை போடுகிறார். இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ தளபதி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.