3 நாளில் ரூ.7200 கோடியை செலவழித்த இந்திய பணக்காரர்கள்.. சிட்டாய் பறந்த 1,113 சொகுசு வீடுகள்..!!
பல் இருக்கிறவர்கள் பக்கோடா சாப்பிடலாம், மற்றவர்கள் வாயை மூடிக் கொள்ளலாம் என்பதற்கு ஏற்ப டெல்லியில் மூன்றே நாளில் ரூ.7200 கோடியை செலவழித்த இந்தியப் பணக்காரர்களைப் பற்றி தற்போது உலகமே பேசுகிறது என்றால் உங்களால் நம்ம முடியுமா..?
இந்தியாவில் ரியல் எஸ்டேட் விலை அதிகரித்து வந்தாலும் நிறைய பேர் தங்களது கனவு இல்லத்துக்காக எவ்வளவு விலை வேண்டுமென்றாலும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர், இதில் குறிப்பாக பெரும் பணக்காரர்கள். குருகிராமில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு திட்டத்தில் வீடு விற்பனை தொடங்கிய மூன்றே நாட்களில் ரூ.7200 கோடி மதிப்பிலான வீடுகளை பலர் வாங்கியுள்ளனர். இந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, இது இந்தியாவில் அதிகரித்து வரும் ஆடம்பர வீடுகளின் விற்பனையின் புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிஎல்எப் நிறுவனம் குருகிராமில் உள்ள டிஎல்எப் பிரிவானா சௌத் குடியிருப்பில் உள்ள 1,113 சொகுசு ஃபிளாட்டுகளை விற்பதாக அறிவித்தது. இந்த வீடுகள் அனைத்தும் நிறைய என்ஆர்ஐகள் உள்பட பல பணக்காரர்கள் முந்தியடித்துக் கொண்டு மூன்றே நாட்களில் ரூ.7200 கோடிக்கு வாங்கிப் போட்டுவிட்டனர். இந்த புதிய குடியிருப்புத் திட்டம் 25 ஏக்கர் பரப்பளவில் குருகிராமின் செக்டர் 76, 77இல் அமைந்துள்ளது. இதில் 1,113 ஆடம்பர அப்பார்ட்மெண்ட்கள் உள்ளன. 7 கோபுரங்கள், 14 பென்ட்ஹவுஸ் மற்றும் அப்பார்ட்மெண்ட்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்டும் 3,500 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது, அதன் விலை ரூ.6.25 முதல் ரூ.7.5 கோடியாக இருந்தது. பென்ட்ஹவுஸ்கள் ரூ.11 முதல் ரூ.14 கோடி வரை விற்கப்பட்டது. இந்த புதிய திட்டம் டிஎல்எப் பிரிவானாவின் ஒரு பகுதியாகும். அங்கு மொத்தமுள்ள 116 ஏக்கரில் இது வெறும் 25 ஏக்கர் மட்டும்தான். இந்த எல்எப் பிரிவானா சௌத் குடியிருப்பில் ஒரு சதுர அடி ரூ.18,000க்கு விற்கப்படுகிறது. இது குருகிராமில் ஒரே ஆண்டுக்குள் டிஎல்எப் நிறுவனத்தின் இரண்டாவது வெற்றிகரமான அறிமுகமாகும். கடந்த மார்ச் மாதத்தில் 1,137 சொகுசு அப்பார்ட்மென்ட்களை தி ஆர்பர் திட்டத்தின் கீழ் ரூ.8000 கோடிக்கு விற்றது. DLF நிறுவனம் இந்த புதிய திட்டத்தை கடந்த மாதத்தில் துவக்கியது. டிசம்பர் 22-24 ஆகிய மூன்று நாட்களுக்குள் முழு திட்டமும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று டிஎல்எப் ஹோம் டெவலப்பர்ஸ் லிமிடெட் இணை நிர்வாக இயக்குநரும் தலைமை வணிக அதிகாரியுமான ஆகாஷ் ஓஹ்ரி கூறினார். நாங்கள் இந்தியா முழுவதிலும் மற்றும் என்ஆர்ஐகளிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளோம். இந்திய புலம்பெயர்ந்தோர் 25 சதவீத யூனிட்களை முன்பதிவு செய்துள்ளனர் என்று ஓஹ்ரி கூறினார். வீடுகளை வாங்கியவர்களில், 85 சதவீதம் பேர் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கும் என்றும், 15 சதவீதம் பேர் முதலீட்டாளர்கள் என்றும் அவர் கூறினார்.