Corona Virus : அச்சுறுத்தும் கொரோனா! எளிதில் தப்பிக்க இதோ வழிகள்!
கொரோனா அதிகரிக்க காரணம் வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளது (JN.1) என நிபுணர்கள் தெரிவித்தாலும், அரசு இதுவரை 21 பேருக்கு மட்டுமே உருமாற்றம் பெற்ற கொரோனா தாக்கம் உள்ளது எனக் கூறி வருவதை எற்க முடியுமா?
கோவாவில் 19 பேருக்கும், கேரளா மற்றும் மஹாராஷ்ட்ராவில் தலா 1 நபருக்கு மட்டுமே உருமாற்றம் பெற்ற கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கூட ஜேஎன் 1 பாதிப்பு இல்லை என்பதை ஏற்க முடியாது.
சிங்கப்பூரில் சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற நபருக்கு ஜேஎன் 1 பாதிப்பு உறுதியான நிலையில், தமிழகத்தில் நிச்சயம் ஜேஎன் 1 பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகம் என்ற சுழலில் மூலக்கூறு ஆய்வுகளை தமிழகத்தில் தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும்.
எனவே, தமிழகத்தில் கொரோனா மூலக்கூறு ஆய்வுகளை அதிகப்படுத்த வேண்டும்.
ஜேஎன் 1 உருமாற்றம் பெற்ற கொரோனாவில் எக்ஸ்பிபி 1.5ஐக் காட்டிலும் 41 உருமாற்றங்கள் கூடுதலாக உள்ளதால் (அவற்றில் பெரும்பாலானவை ஸ்பைக் புரதத்தில் உள்ளது), ஜேஎன் 1 வேகமாக பரவி மற்ற கொரோனா வைரஸ் பாதிப்பை பின்னுக்கு தள்ளிவிடும்.
மேலும் கொரோனா தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்புத்திறனுக்கு இது கட்டுப்படாது.
இந்த புதுவகை கொரோனா வைரஸ் மற்ற கொரோனா வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றாலும், நோய் தீவிரம் (அதிக மருத்துவமனை சேர்ப்பு/இறப்பு) கூடுதலாக இருக்கும் என்பது உறுதிசெய்யப்படவில்லை.
இந்த சூழலில் உருமாற்றம் பெற்ற கொரோனா பாதிப்பை முன்கூட்டியே கண்டறியும் கழிவுநீர் பரிசோதனைகளை தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளாமல் இருப்பது சரியல்ல.
கொரோனா பாதிப்பு அதே நிலையில் உள்ளதா? அதிகரித்து அல்லது குறைந்து வருகிறதா? என கழிவுநீர் (Sewage studies) பரிசோதனையில் எளிதாக கண்டறிய முடியும் என இருக்க தமிழகம் மற்றும் இந்தியாவில் அத்தகைய ஆய்வுகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
இணைநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்புத்தன்மை குறைவாக உள்ளவர்கள் கொரோனா பாதிப்பின்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வலியுறுத்தப்பட்டாலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்காமல், மூலக்கூறு ஆய்வுகளை அதிகப்படுத்தாமல் அலட்சியமாக இருந்தால் (மத்திய சுகாதாரத்துறை இவற்றை நிச்சயம் அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நடைமுறையில் அது நடக்கவில்லை) நோய் பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும்.
தடுப்பூசிக்கு கட்டுப்படாத உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் நோய் பரவலுக்கு முக்கிய காரணியாக இருந்தாலும், கீழ் வரும் மற்ற காரணங்களையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
உருமாற்றம் அடைந்துள்ளதால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தடுப்பூசிக்கு இது கட்டுப்படாது. குளிர் காலத்தின் தொடக்கம் வைரஸ் பரவ (எளிதில் பல்கி பெருக) ஏதுவாக இருக்கும்.
குளிர் காலத்தில் ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் இருப்பது பிரச்னை ஆகலாம்.
குளிர்ந்த காற்று இருப்பதால் வைரஸ் காற்றில் கலந்து பிற இடங்களுக்கு செல்வது தடைப்படுவதால் எளிதில் பிறருக்கு பரவும் சூழல் அதிகமாகும்.
புற ஊதாக் கதிர்களின் காக்கும் திறன் பூமி சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதால் குறையும்.
குளிர் காரணமாக இரத்த ஓட்டம் குறைவதால், நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் நோய் எதிர்ப்புத்திறன் குறையும்.
இயற்கை நோய் எதிர்ப்புத்திறன் குறையும். சுவாச மண்டல செல்களில் உள்ள சிலியா (Cilia) சரியாக வேலை செய்யாததால், வைரஸ்களை வெளியேற்றுவதில் சிரமம் இருக்கும்.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகைக் காலம் நெருங்குவதால், அதிக மக்கள் பயணம் மேற்கொண்டு மக்களின் கலப்பு கணிசமாக அதிகரிக்கும்.
இவை அனைத்தும் நோய் பரவலை எளிதாக்கும் என்பதால் அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை (விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதிக்கப்பட்டோரை விரைந்து பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்) அரசு மேற்கொள்ள வேண்டும்.
சுருக்கமாக பரிசோதனைகள் மற்றும் மூலக்கூறு ஆய்வுகளை அதிகப்படுத்த வேண்டும்.
கழிவுநீர் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய வேண்டும்.
குளிர்காலம் வைரஸ் பரவலுக்கு ஏதுவாக இருப்பதால்,அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் வேண்டும்.
பண்டிகை காலத்தின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆரம்பத்திலேயே அவர்கள் கண்டறியப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையில், உருமாற்றம் பெற்ற கொரோனா காரணமாக இறப்புகள் அதிகமாகாமல் இருக்கும் வாய்ப்பு இருந்தாலும், சுவாச மண்டல நோய்தொற்று நிச்சயம் அதிகமாகி சுகாதாரத்துறைக்கு கூடுதல் சுமையை, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளவில்லையெனில் நிச்சயம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.
கொரோனா பரவல் அதிகமானதால் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.
அரசு இனியாவது தேவையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனே முன்வருமா என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.