அனுமனுக்கு, ‘சொல்லின் செல்வர்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
‘சொல்லின் செல்வர்’ என்று புகழப்படுபவர் ஸ்ரீ அனுமன். அவருக்கு இந்தப் பட்டப்பெயர் எப்படிக் கிடைத்தது தெரியுமா?
பதினாலு வருஷ வனவாசமாக வனத்திற்கு வந்த ஸ்ரீ ராமன் சீதையை பறிகொடுத்து விட்டு அலைபாயும் மனத்தோடு பரிதவித்துக் கொண்டிருக்கிறார். அவரும் லட்சுமணனுமாக அலைந்து திரிந்து கிஷ்கிந்தைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே சுக்ரீவன் சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக வாக்களிக்க, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனை வானர சாம்ராஜ்யத்திற்கு அரசனாக ஆக்கினார்.
சுக்ரீவனுக்கு வாலி வதம் மிகுந்த மன நிம்மதியை அளிக்க, அவன் மிக்க நன்றியோடு எப்பாடு பட்டாவது சீதையைக் கண்டுபிடித்து ராமனின் மனக்கலக்கத்தையும், துயரத்தையும் போக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டான். எல்லோரும் கூடி ஆலோசித்து ஸ்ரீ அனுமன் அதற்குப் பொருத்தமானவர் என்று தீர்மானித்து அவரை சீதையைத் தேட அனுப்புகிறார்கள்.
கடலைத் தாண்டி, கடலுக்குள் இருக்கும் பகைவர்களை ஜெயித்து லங்காபுரிக்குச் சென்று அந்த நாடு முழுவதும் தேடி கடைசியில் அசோக வனத்தில் சீதையைக் கண்டு ஸ்ரீ ராமன் தன்னிடம் தந்த கணையாழியை சீதா பிராட்டியிடம் கொடுத்தார். அசோக வனத்தில் சீதையை கண்டதோடு மட்டுமல்லாமல், அந்த செய்தியை அவர் திருவாக்காலேயே
ஸ்ரீ ராமனுக்குச் சொன்னார்.
எப்படிச் சொன்னார் தெரியுமா? சீதையை என்று ஆரம்பித்தால் கூட சீதைக்கு என்ன ஆனதோ என்று ராமன் பயந்து விடுவார் என எண்ணி, ‘கண்டேன் சீதையை!’ என்றார். எப்பேர்ப்பட்ட நேர்மறை வார்த்தைகள்! எதிராளியின் பயம், மனக்கவலை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து நொடிப்பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் வார்த்தைகள்! இந்த வார்த்தைகளைச் சொல்லி ஸ்ரீ ராமரின் மனதை அமைதிப்படுத்தியதால் அல்லவோ, ‘சொல்லின் செல்வர்’ என்று புகழப்படுகிறார்
ஸ்ரீ அனுமன்? அருணாசலக் கவிராயர் இந்த சம்பவத்தை, ‘கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை! கண்டேன் ராகவா!’ என்னும் பாகேஸ்ரீ ராகப் பாடலில் மிக அழகாக எழுதியிருக்கிறார்.