ஸ்கூட்டர் வாங்கும் பிளானில் இருந்தால் அப்படியே ஸ்டாப் பண்ணுங்க!! இந்த 2024இல் புதுசா நிறைய ஸ்கூட்டர்கள்…
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பெரும்பாலானோர் ஸ்கூட்டர்களாகவே வாங்க விரும்புகின்றனர். ஏனெனில், பின்னர் காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம் என்பதால், பெரிய தொகையை எலக்ட்ரிக் வாகனங்களுக்காக செலவழிக்க நிறைய பேர் இன்னும் தயாராக இல்லை.
இதனாலேயே புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அதேநேரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கும் எந்த பஞ்சமும் இல்லை. இந்த புதிய 2024ஆம் வருடத்திலும் நிறைய ஸ்கூட்டர்கள் டாப் பிராண்ட்களில் இருந்து வெளிவரவுள்ளன. அவற்றுள் சிலவற்றை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹீரோ ஸூம் 160 (Hero Xoom 160): இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பின் முதல் அட்வென்ச்சர் ஸ்கூட்டர். கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற EICMA 2023 கண்காட்சியிலும் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. அட்வென்ச்சர் ஸ்கூட்டர் என்பதால், உயரம் சற்று அதிகமாக இருக்கும். ஹீரோவின் ஐ3எஸ் தொழிற்நுட்பத்துடன் 156சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹீரோ ஸூம் 125ஆர் (Hero Xoom 125R): 2023 EICMA கண்காட்சியில் ஹீரோ சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட மற்றொரு ஸூம் ஸ்கூட்டர். விற்பனையில் இருக்கும் ஸூம் 110சிசி ஸ்கூட்டர் உடன் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கும் ஸூம் 125ஆர் ஸ்கூட்டர் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. 125சிசி என்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட உள்ளது.
டிவிஎஸ் ஜூபிட்டர் 125 கிளாசிக் (TVS Jupiter 125 Classic): தற்போதைய ஜூபிட்டர் ஸ்கூட்டர்களில் விலைமிக்கதாக ஜூபிட்டர் கிளாசிக்கை இந்த 2024ஆம் வருடத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. வழக்கமான ஜூபிட்டர் ஸ்கூட்டரை காட்டிலும் விலைமிக்கதாக தெரிய வேண்டும் என்பதற்காக, எல்இடி ஹெட்லைட், பெரிய விஸர், பிரீமியம் தரத்தில் தோற்றமளிக்கும் இருக்கை கவர் மற்றும் பேக்ரெஸ்ட் உள்ளிட்டவற்றை புதிய ஜூபிட்டர் கிளாசிக் கொண்டிருக்கும்.
அப்டேட்டான வெஸ்பா (Updated Vespa): வெஸ்பா ஸ்கூட்டர்கள் அவற்றின் அதிகப்படியான விலையினால் கஸ்டமர்கள் மத்தியில் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. இந்தியாவில் 125சிசி மற்றும் 150சிசி-களில் ஸ்கூட்டர்களை வெஸ்பா விற்பனை செய்கிறது. இவற்றிற்கு ஒவ்வொரு வருடமும் புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை வெஸ்பா அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், இந்த வருடத்திலும் வெஸ்பா 125சிசி & 150சிசி ஸ்கூட்டர்களுக்கு புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
யமஹா என்மேக்ஸ் 155 (Yamaha NMAX 155): யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதே நம்பிக்கையில், என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரை யமஹா இந்த 2024இல் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரோக்ஸ் மற்றும் என்மேக்ஸ் இரண்டும் அளவில் பெரியதான மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் ஆகும். இன்னும் சொல்லப் போனால், ஏரோக்ஸ் 155-ஐ காட்டிலும் என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் உயரம் அதிகம் கொண்டவையாக இருக்கும்.