பொங்கல் என்று ஒரு பண்டிகையே இல்லை.. முஸ்லிம், கிறிஸ்துவர்களை இழுத்து பாஜக நிர்வாகி சர்ச்சை பதிவு
சென்னை: பொங்கலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தமிழ் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொங்கல் என்ற பண்டிகையே இல்லை என்று குறிப்பிட்டு, மத வெறுப்பை பரப்பும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் பாஜக பெண் நிர்வாகி ஒருவர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கானும் பொங்கல் என வாரம் முழுவதும் விடுமுறை கொண்டாட்டங்கள் என தமிழ்நாடே கலைகட்டப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சாதி, மதம் கடந்து ஒன்றாக உற்சாகமாக கொண்டாடும் பண்டிகையாக உள்ளது பொங்கல்தான். தமிழர்களாக அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளாக இது உள்ளது.
விவசாயிகளின் பயிர் அறுவடையை மையமாக கொண்டு கொண்டாடப்படும் இந்த நாளில் பச்சரிசி பொங்கல் வைத்து, கரும்பு சுவைத்து, புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வார்கள். மறுநாள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை, பானை உடைத்தல் போன்ற கிராம விளையாட்டுகளும் நடத்தப்படுவது வழக்கம்.
இப்படி வாரம் முழுக்க பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்காக புத்தாடை, கரும்பு, மளிகை பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழ்நாடு அரசும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.1000 பரிசுத் தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது. இப்படி தமிழ்நாடே பொங்கல் கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வரும் நிலையில் பொங்கல் என்ற பண்டிகையே இல்லை என்று தெரிவித்து இருக்கிறார் பாஜக பிரமுகர் பரமேஸ்வரி.