சோனி-ஹோண்டா கூட்டணியில் உருவாகும் கார் உற்பத்திக்கு தயார்.. இதோ புரோட்டோடைப் மாடலகூட அறிமுகம் செஞ்சுட்டாங்க!
மின்சாதன வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான சோனியும், வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹோண்டாவும் இணைந்து வாகனம் ஒன்றை தயாரித்து வருவதாக சமீப சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இந்த தகவலை இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே உறுதி செய்துவிட்டன.
இந்த நிலையிலேயே தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் அந்த வாகனம் உற்பத்திக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் புரோட்டோ-டைப் வெர்ஷனே தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து அஃபீலா எனும் செடான் ரக கார் மாடலையே உருவாக்கி இருக்கின்றன.
அஃபீலா ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இந்த கார் இயங்கும். சிஇஎஸ் 2024 வாயிலாகவே தற்போது அஃபீலா எலெக்ட்ரிக் காரின் முன் மாதிரி மாடல் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இது வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் அஃபீலா எலெக்ட்ரிக் காருக்கு உலக அளவில் புக்கிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது சந்தேகமே. அதேவேளையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு மிக சூப்பராக உள்ளது.
ஆகையால், அடுத்து 2026 ஆம் ஆண்டில் இல்லை என்றாலும், 2027 அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகளில் அந்த கார் விற்பனைக்கு வருவதற்கான சூழல் உருவாகலாம். தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் காரிலும் இல்லாத அம்சங்கள் பலவற்றை தங்களின் கூட்டணி இந்த காரில் புகுத்தி இருப்பதாக ஹோண்டா – சோனி தெரிவித்து இருக்கின்றது.
இதேபோல், சொகுசு அம்சத்திலும் இந்த கார் மிக சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறுகின்றனர். மேலும், மிக சிறந்த அழகிய தோற்றம் கொண்ட காராகவும் இதனை அவர்கள் தயாரித்து இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக புரோட்டோ டைப் இருக்கின்றது. மிகவும் நீளமான தோற்றத்தில் அஃபீலா தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
ஹெட்லைட், பம்பர் மற்றும் வீல்கள் இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளன. இவை அனைத்தும் தனித்துவமான தோற்றத்தில் உள்ளன. குறிப்பாக, அஃபீலா எனும் லோகோ ஒளிரும் வகையில் இருப்பது, அக்காருக்கு கூடுதல் அழகை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
அஃபீலா 4,195 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம் மற்றும் 1,460 மிமீ உயரத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வீல் பேஸ் 3000 மிமீ ஆகும். இந்த கார் பிஓஎஸ்5 வாயிலாக கன்ட்ரோல் செய்யப்படும். இத்துடன், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவை காரின் நான்கு வீல்களும் இயங்க உதவியாக இருக்கும். இந்த ஒவ்வொரு எலெக்ட்ரிக் மோட்டாரும் 241 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இரண்டும் சேர்ந்து 482 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும். இத்துடன், மிக சிறந்த ரேஞ்ச் திறனை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த காரில் 91 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600க்கும் அதிகமான கிமீ வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. ஆனால், உண்மையான ரேஞ்ஜ் திறன் என்ன என்பது பற்றிய விபரத்தை நிறுவனம் அறிவிக்கவில்லை. அதேவேளையில், 150 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இதுமட்டுமல்ல 11kW லெவல் 2 சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். சோனி – ஹோண்டா கூட்டணியில் தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள், ஹூண்டாய் நியோஸ் உள்ளிட்டவற்றிற்கு மிகப் பெரிய போட்டியாளனாக அமையும்.