மனைவியால் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி: சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்ஷதா மூர்த்திக்கு லாபம் கிடைக்கலாம் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கிய நிலையில், சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முடிவொன்றை எடுத்துள்ளார் அக்ஷதா.
மனைவியால் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி
கடந்த ஆண்டு, பிரித்தானிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது. அதில், குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான உதவித்தொகை, சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில் இரட்டிப்பாக்கப்படுவதாக அறிவித்திருந்தார் சேன்ஸலர் ஜெரமி ஹண்ட்.
பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார்.
ஆகவே, பிரதமர் அறிவித்த சலுகை மூலம், அவரது குடும்பத்துக்கே கூடுதல் இலாபம் கிடைக்கிறதா என்பதைக் குறித்து ரிஷி பதிலளிக்கவேண்டுமென அரசியல்வாதிகள் பலர் கோரியிருந்தனர்.
மேலும், Koru Kids நிறுவனத்தில் ரிஷியின் மனைவி பங்குதாரராக உள்ள விடயத்தை அவர் மறைத்ததாக சில பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பினார்கள். இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை உருவாகியது
சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர அக்ஷதா எடுத்துள்ள நடவடிக்கை
இந்நிலையில், அந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளார் அக்ஷதா. அதாவது, தான் பங்குதாரராக இருந்த குழந்தைகள் நல அமைப்பான Koru Kids நிறுவனத்திலிருந்த தனது பங்குகளை, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அவர் நன்கொடையாக வழங்கிவிட்டார்.
தான் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்ததால், தேவையில்லாமல் அந்த நிறுவனத்துக்கு கவனச் சிதறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தான் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Koru Kids நிறுவனம், தனது பணியிலும், வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவேண்டும் என தான் விரும்புவதாகவும் அக்ஷதா தெரிவித்துள்ளார்.