கனேடிய துணைப் பிரதமரை கேள்வி கேட்ட ஊடகவியலாளர் கைது: எலான் மஸ்கால் வைரலாகிய வீடியோ

ஊடகவியலாளர் ஒருவர் கனேடிய துணைப் பிரதமரிடம் கேள்வியொன்றை முன்வைத்த நிலையில், கனேடிய பொலிசாரை தாக்கியதாக போலியாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பான வீடியோவுக்கு எக்ஸின் உரிமையாளரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் ரியாக்ட் செய்ததைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

கனேடிய துணைப் பிரதமரை கேள்வி கேட்ட ஊடகவியலாளர்

ரொரன்றோவின் புறநகர்ப் பகுதியான ரிச்மண்ட் ஹில்லில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய உள்ளூர் ஊடகமான Rebel News தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் டேவிட் மென்சீஸ்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையினால் (IRGC) PS 752 என்ற பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த தினமான ஜனவரி 8ஆம் திகதி, இந்த சம்பவம் நடந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

துணைப்பிரதமரான கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை (Chrystia Freedland) அணுகிய டேவிட், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை ஏன் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படவில்லை என்று கேட்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

அவருக்கு பதிலளிக்காமல் ஃப்ரீலாண்ட் நழுவ, மீண்டும் டேவிட் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உடனடியாக டேவிடை காவலர்கள் சூழ்ந்துகொள்ள, அவர் தாக்குதல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அவரிடம் பொலிசார் ஒருவர் கூறுகிறார்.

எலான் மஸ்கால் வைரலாகிய வீடியோ

இந்த வீடியோ எக்ஸில் பகிரப்பட்டு வரும் நிலையில், எக்ஸின் உரிமையாளரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மூத்த அரசாங்க அதிகாரியை அணுக முயற்சிக்கும் ஒருவரை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுப்பது சரியானதான் என்று கூறியுள்ள எலான் மஸ்க், ஆனால், டேவிட், வேண்டுமென்றே ஒரு அதிகாரியைத் தாக்கியதாகக் கூறுவது தவறானது என்று கூறியுள்ளார்.

PS752 என்னும் உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம், 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ஆம் திகதி, டெஹ்ரானிலிருந்து கீவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த ஒன்பது பணியாளர்களும் 167 பயணிகளும் கொல்லப்பட்டனர். விமானத்தில் 50க்கும் மேற்பட்ட கனேடிய பிரஜைகள் இருந்தனர்.

இந்த விடயம் குறித்து துணைப் பிரதமரிடம் கேள்வி எழுப்பும்போதுதான் ஊடகவியலாளரான டேவிட் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *