இன்னும் 35 ரன் எடுத்தால் போதும்.. விராட் கோலியின் பிரம்மாண்ட சாதனை
மும்பை : விராட் கோலி அடுத்து நடக்க உள்ள இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் 35 ரன்கள் எடுத்தும் பட்சத்தில், வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத இமாலய சாதனை ஒன்றை செய்ய இருக்கிறார்.
இந்திய அளவில் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதில் மேலும் ஒரு மைல்கல்லாக 12,000 டி20 ரன்களை குவிக்க இருக்கிறார் விராட் கோலி.
அவர் தற்போது 374 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதில் 357 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 11965 ரன்கள் குவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இன்னும் 35 ரன்கள் சேர்த்தால் அவர் 12000 ரன்களை எட்டி இந்திய அளவில் முதல் ஆளாக அந்த மைல்கல் சாதனையை படைத்த வீரர் என்ற பெருமையை பெறுவார் விராட் கோலி.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கிறிஸ் கெயில் (14562 ரன்கள்), சோயப் மாலிக் (12993 ரன்கள்), கீரான் பொல்லார்ட் (12390 ரன்கள்) உள்ளனர். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா எட்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 11035 ரன்கள் குவித்துள்ளார்.