‘ஆப்கானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலி இல்லை’: டிராவிட் தகவல்
India Vs Afghanistan | Virat Kohli: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்விளையாட உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை வியாழக்கிழமை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கோலி அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவார் என்றும், இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்றும் அவர் கூறினார். கோலி கடைசியாக நவம்பர் 2022 இல் தான் டி20 ஃபார்மெட்டில் விளையாடினார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி 20 உலகக் கோப்பையின் போது இந்தியாவின் அரையிறுதி தோல்விதான் அவரது கடைசி ஆட்டம்.
இதனிடையே, காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் உடற்தகுதியுடன் இருக்கும் நிலையில், இந்தத் தொடருக்கு கேப்டனாக இருக்கும் ரோகித் தொடர்ந்து முன்னிலை வகிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் தேர்வுக்கு வரவில்லை.