ஆப்பிள் Vs ஆரஞ்சு – இவற்றில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழம் எது?
உலகில் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
சர்க்கரை நோய் வந்துவிட்டால், நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அஜாக்கிரதையாக இருந்தால், அந்த சர்க்கரை நோயே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும்.
சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க வேண்டும். அதற்கு நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிடும் மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடும்.
ஆகவே இவற்றைத் தவிர்க்க நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் பழங்களில் அதிகம் உள்ளன. அதே சமயம் பழங்களில் இயற்கை சர்க்கரையும் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதுவும் தற்போது ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு சீசன் என்பதால், இவ்விரு பழங்களும் விலைக்குறைவில் அதிகம் விற்கப்படுவதைக் காணலாம்.
ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய இரண்டு பழங்களுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய சத்துக்களைக் கொண்ட பழங்களாகும். ஆனால் இவ்விரு பழங்களில் எது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழம் என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம். இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த பழம் சிறந்தது?
சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த பழம் சிறந்தது என்பதை விட, சர்க்கரை நோயாளிகள் உணவுடன் பழங்களை எப்படி உட்கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பொதுவாக பழங்கள் உடலுக்கு வேண்டிய சத்துக்களைக் கொண்டிருக்கும். ஆனால் அது அந்த பழங்களை எவ்வளவு சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம், எந்த மாதிரி உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் அது வழங்கும் நன்மைகள் உள்ளன.
எப்போதும் சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் கலோரிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த பழத்தை சாப்பிடுவதாக இருந்தாலும், 15 கிராமிற்கு அதிகமாக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஆப்பிள் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது?
பொதுவாக ஆப்பிளில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது சர்க்கரை செரிமானமாவதை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. ஆப்பிள் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதற்கும் இந்த நார்ச்சத்து தான் காரணம். ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள் இன்சுலின் உற்பத்திக்கு காரணமான பீட்டா செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. அதற்காக ஆப்பிளை அதிகமாக சாப்பிடக்கூடாது.
சொல்லப்போனால் ஒரு மிதமான அளவிலான ஆப்பிளை சாப்பிடுவது போதுமானது. ஒரு மிதமான அளவிலான ஆப்பிளில் 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஆப்பிளை புரோட்டீன் அல்லது ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளுடன் உட்கொண்டால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். உதாரணமாக, ஒரு கைப்பிடி உலர் பழங்கள் மற்றும் சீஸ் உடன் கலந்து ஆப்பிளை சாப்பிடலாம்.
ஒரு சிறிய அளவிலான ஆப்பிளில் சுமார் 4 கிராம் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது.