தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள்… ரத்தத்தில் கலக்கும் அபாயம்… அதிர வைக்கும் ஆய்வு
பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் திரவங்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை குடிப்பதால் நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எங்கு சென்றாலும், சுத்தமான நீரை பருக வேண்டும் என்ற எண்ணத்தில் பாட்டில் தண்ணீரைக் குடிக்கும் பழக்கம் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. பயணம் செய்யும் போது அல்லது சந்தையில் சுற்றித் திரியும் போது, நம்மில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரைக் குடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. வீடுகளில் கூட தண்ணீரை சேமித்து வைக்க ஏராளமானோர் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அவ்வாறு செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சுமார் 240,000 நானோ பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை நாம் கண்களால் பார்க்க முடியாது. இந்த துகள்கள் மிகவும் சிறியவை, அவை மனித இரத்தத்தில் கூட நுழையும்.
இந்த ஆய்வு தேசிய அறிவியல் அகாடமியின் (PNAS) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் காணப்படும் துகள்கள் மிகவும் சிறியவை என்றும் அவை நமது உடல் செல்கள் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழைந்து நமது உடல் உறுப்புகளை அழிக்கும் என்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைகளின் உடலிலும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் சென்றடையும். கருவுற்றிருக்கும் தாயின் தொப்பூள் கொடி மூலம் இவை கருவை சென்றடையும். இதனால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து (Health Tips) ஏற்படலாம்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் நுண்துகளாகும். இந்த பிளாஸ்டிக் துகள்கள் நமது தலைமுடியின் அகலத்தில் 17-ல் ஒரு பங்கை விட சிறியது. இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் 2 லட்சத்துக்கும் அதிகமான துகள்கள் இருந்தாலும், அவை யாராலும் பார்க்கப்படாமல் இருப்பதற்கு இதுவே காரணம். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் துகள்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் நீரில் கலந்து விடுகிறது.