Dhanush: “மீண்டும் ஹாலிவுட்டில் என்ட்ரி… தனுஷின் அடுத்த சம்பவம்” அப்டேட் கொடுத்த அருண் மாதேஸ்வரன்
சென்னை: கோலிவுட் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் நடித்துள்ள கேப்டன் மில்லர் பொங்கல் ஸ்பெஷலாக நாளை வெளியாகிறது.
இதனையடுத்து இப்படத்தின் ப்ரொமோஷனில் பங்கேற்ற இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனுஷின் அடுத்த ஹாலிவுட் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
மீண்டும் ஹாலிவுட் செல்லும் தனுஷ்
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். ஹீரோவுக்காக இருந்த அத்தனை ஃபார்முலாக்களையும் உடைத்து தனி சாம்ராஜ்யம் அமைத்தார். ஹீரோவாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்ற தனுஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த லெவலிலும் மாஸ் காட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஹாலிவுட்டில் வெளியான தி கிரே மேன் படத்திலும் நடித்திருந்தார் தனுஷ்.
இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் நாளை வெளியாகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம், பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பீரியட் ஜானரில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர், தனுஷுக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கொடுத்துள்ளது. இதனிடையே இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ப்ரியங்கா மோகன் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது தனுஷின் அடுத்த ஹாலிவுட் மூவி குறித்து அருண் மாதேஸ்வரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
கேப்டன் மில்லரையோ அல்லது இன்னொரு படத்தையோ ஹாலிவுட்டில் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதில் யாரை ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள் என அருண் மாதேஸ்வரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தனுஷே ஹாலிவுட் ஹீரோ தான், அதனால் அவரை வைத்தே படம் இயக்குவேன். தனுஷ் ஏற்கனவே ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார். இதைவிட வேற என்ன வேண்டும்” என்றார்.
அதுமட்டும் இல்லாமல் ‘தி கிரே மேன்’ மூவியை தொடர்ந்து, மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அருண் மாதேஸ்வரன் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால், தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர். கேப்டன் மில்லரை தொடர்ந்து D 50, பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் மூவி, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், அவர்களை அடுத்து மாரி செல்வராஜ், நெல்சன், மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.