டெல்லி தலைமையிடம் கோள்மூட்டியவர்களே… மோடி குறித்து சொன்னது இதுதான் – கார்த்தி சிதம்பரம் விளக்கம்
சென்னை: பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்க நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டிவி பேட்டி ஒன்றில், பிரதமர் மோடியை புகழ்ந்தார்- மோடிக்கு இணையான தலைவர் ராகுல் காந்தி இல்லை என கூறினார் என தகவல்கள் பரப்பிவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் இப்படி பேசினாரா? என சர்ச்சைகளும் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பேசியதால் விளக்கம் தர கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. ஆனால் தமக்கு விளக்க நோட்டீஸ் எதுவும் வரவில்லை. தமக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகாரம் இருக்கிறதா? எனவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த பின்னணியில் இன்று தமது சமூக வலைதளப் பக்கத்தில், ” டெல்லி தலைமையிடம் கோள்மூட்டுபவர்களுக்கும், நான் கூறிய கருத்தை தமிழ் தெரியாதவர்களிடம், வேண்டுமென்றே திரித்து சொன்னவர்களுக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன். Dedicated to all tale carriers & misinterpreters” என பதிவிட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
கார்த்தி சிதம்பரம் சொன்னது என்ன?: அதாவது டிவி பேட்டியில் தாம் கூறியது என்ன என்பதை விளக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் எம்பி இதனைப் பதிவிட்டுள்ளார்.
அந்த டிவி பேட்டியில் கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:
கேள்வி: மல்லிகார்ஜூன கார்கே மோடிக்கு மேட்சா?
கார்த்தி சிதம்பரம்: இன்றைக்கு இருக்கிற propaganda machine-ல் என்னைப் பொறுத்தவரை யாருமே மோடிக்கு மேட்ச் இல்லைன்னுதான் சொல்வேன். இன்னைக்கு propaganda-வில்..
கேள்வி: ராகுல் நின்றாலுமே கஷ்டம்தானா?
பதில்: என்னைப் பொறுத்தவரைக்கும் இன்னைக்கு ஒன் டூ ஒன் மேட்ச் பண்ணினீங்கன்னா இன்னைக்கு அவருக்கு இருக்கும் propaganda machine, அவருக்கு இருக்கிற நேச்சுரல் அட்வான்டேஜ் அஸ் பிரைம் மினிஸ்டர்னு பார்த்தீங்கன்னா கஷ்டம். ஆனால் பிஜேபியை தோற்கடிக்க முடியுமான்னு கேட்டீங்கன்னா நிச்சயம் தோற்கடிக்க முடியும்னுதான் சொல்வேன். ஏன்னா எலக்ட்டோரல் அரித்மேட்டிக்கை கரெக்ட் போட்டு மெசேஜிங் கொண்டு போனால் பிஜேபியை தோற்கடிக்க முடியும். மோடியின் பாப்புலாரிட்டி ஒரு பேக்டராக இருந்தாலும் மோடிக்கு இணையாக, மோடிக்கு சமமான ஒரு நபரை உருவாக்குங்கன்னு சொன்னீங்கன்னா எனக்கு இம்மீடியட்டா ஒரு பேரை சொல்ல முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக்கும் அடித்தொண்டனை கேட்டீங்கன்னா ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். ஆனால் கூட்டணிக் கட்சிகள் எங்களுடைய தலைவரை முன்னிறுத்துங்கள் என சொல்கின்றன.. அது சில டேக்டிக்கல் ரீசனுக்காக சொல்றாங்க. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.