அலங்காநல்லூரிலிருந்து ஜஸ்ட் 5 KM தான்! இதெல்லாம் ஒரு தூரமா?அண்ணாமலை மீது அழகிரிக்கு வந்த கோபம்

சென்னை: அலங்கநல்லூரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலிருந்து வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களோடு தொடர்பில்லாத இடத்தில் இருப்பதாகவும் அண்ணாமலை கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

 

பாராட்டுவதற்கு மனமில்லாத அண்ணாமலை இட்டுக்கட்டி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

”மதுரை அலங்காநல்லூரில் தமிழக பொதுப்பணித்துறை ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக பிரம்மாண்டமான மைதானத்தில் அரங்கு அமைத்திருப்பதை வரவேற்கிறேன். இது அலங்காநல்லூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 61 கோடி செலவில் 5 ஆயிரம் மக்கள் அமர்ந்து பார்க்கிற வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மதுரையிலிருந்து வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களோடு தொடர்பில்லாத இடத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தமிழக அரசின் ஜல்லிகட்டு மைதானம் மதுரையிலிருந்து 25 கி.மீ. தூரத்திலும், ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்கநல்லூரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.

அனைத்து வசதிகளுடன் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய வேண்டுமென்றுச் சொன்னால் அதற்கு விசாலமான இடம் தேவைப்படுகிறது. அப்படித் தான் இந்த இடத்தை பொதுப்பணித்துறை தேர்வு செய்து அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக தமிழக முதலமைச்சரையும், பொதுப்பணித்துறை அமைச்சரையும் பாராட்டுவதற்கு மனமில்லாத அண்ணாமலை இட்டுக்கட்டி பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி பேசுகிற போது. தமிழ் மொழி மீது அலாதி பற்று கொண்டிருப்பதைப் போல பாசாங்கு செய்து நாடகம் ஆடி வருகிறார். ஆனால், 2017 முதல் 2022 வரை மோடி அரசு 16,000 மக்கள் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழியை வளர்க்கும் நோக்கத்தோடு தலைநகர் தில்லியில் செயல்படுகிற மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்திற்கு வழங்கிய தொகை ரூபாய் 1074 கோடி.

ஆனால், செம்மொழிகளாக ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்ட தமிழ், கன்னடம், ஒடியா உள்ளிட்ட மொழிகளுக்கு வழங்கப்பட்ட தொகை ரூபாய் 22.94 கோடி மட்டும் தான். இத்தகைய பாரபட்சத்தை செய்து வருகிற பிரதமர் மோடி தமிழ் மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவராக பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *