தமிழக காங்கிரஸ் தலைவர் அமர்த்த தடையாகிறாரா ராபர்ட் வத்ரா?- தேசியத் தலைமையிடம் குவியும் புகார்கள்
புதுடெல்லி: தமிழகக் காங்கிரஸின் புதிய தலைவர் அமர்த்த பிரியங்காவின் கணவரான ராபர்ட் வத்ரா தடையாகி வருவதாகச் சர்ச்சைகள் உலவுகின்றன.
இதன் மீது காங்கிரஸின் தேசியத் தலைமையிடம் தமிழகத்திலிருந்து புகார்கள் குவிவதாகவும் தகவல்கள் பரவி உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் 3 வருடப் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அப்பதவியில் சுமார் 2 வருடங்களாகத் தொடர்பவருக்கு பதிலாக புதியவரை அமர்த்த, காங்கிரஸின் தேசியத் தலைமை திணறுவதாகத் தெரிகிறது. கடந்த வருடம் புதிய தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அமர்ந்தும் தலைவர் அழகிரியின் பதவி தப்பிவிட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக புதியவரை நியமிப்பதில் காங்கிரஸ் சுணக்கம் காட்டுவதாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் அப்பதவிக்கு பேசப்படுபவர்களில் முக்கியமானவரான சிவங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை, ராபர்ட் வத்ராவுடன் இணைத்து நெருக்கடி அளிப்பது காரணமாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, ‘ராபர்ட் வத்ராவின் தொழிலுக்கு கார்த்தி பல வகைகளில் உதவியாக உள்ளார். ராபர்ட்டின் தொழில் பங்குதாரராக கார்த்தி இருப்பதாகவும் பேச்சுக்கள் உள்ளன. இந்த உறவால் அவர் முயலும் தலைவர் பதவியை நேரடியாக மறுக்க தலைமைக்கு விருப்பமில்லை. இதன் பலனை அனுபவிக்கும் வகையில் அழகிரி பதவிக்காலம் முடிந்தும் தொடர்கிறார்.
இந்தநிலை காங்கிரஸை தமிழகத்தில் நலிவடையச் செய்கிறது. ஏனெனில், ராகுலின் பாதயாத்திரைகளால் காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், தனது தவறான நடவடிக்கைகளால் ராகுலை உரிய முறையில் முன்னிறுத்தி பலன்பெறத் தமிழகக் காங்கிரஸ் தவறி விட்டது. இதனால், அடிமட்ட தொண்டர்கள் பலரும் கட்சி மாறத் துவங்கி விட்டனர். இது, தமிழகத்திற்கு புதிய தலைவர் அமர்த்தினால்தான் நிறுத்தம் பெறும். இச்சூழலில், இதர சில கட்சிகளை போல காங்கிரஸுக்கும் செல்வாக்கு குறைகிறது. இதை சாக்காக வைத்து திமுக தன் தேர்தல் உடன்பாட்டில் காங்கிரஸுக்கும் தொகுதிகளை குறைக்கத் திட்டமிடுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், புதிய தலைவரை உடனடியாக அமர்த்தி தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்திக் காட்டுவது அவசியம் என தமிழகத்திலிருந்து புகார் கடிதங்கள் குவிகின்றன’ எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, காங்கிரஸின் 2022 உதய்பூர் சிந்தனை கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே போட்டியிடும் வாய்ப்பு என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, மாநிலங்களவை எம்.பி.யாக தந்தை ப.சிதம்பரம் இருப்பதால் அவரது மகன் கார்திக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது. மேலும் தன் மீதான பல்வேறு வழக்குகளாலும் கார்தியின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.