சேலம் பெரியார் பல்கலையில் மீண்டும் ரெய்டு.. ஆளுநர் ரவி வருகை பரபரப்புக்கு இடையே அலறவிடும் போலீசார்
சேலம்: முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு செல்ல உள்ள நிலையில், போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் (PUTER) என்ற நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களையே பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்தது.
அரசின் அனுமதி பெறாமல் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி, அரசு சம்பளம் பெறும் பல்கலைக்கழக பணியாளர்களை அதில் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் கருப்பூர் காவல்துறையினர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்த துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்துனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் காவல்துறையினர் சில நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர். பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அறை, அவரது இல்லம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம், பதிவாளர் இல்லம் மற்றும் சூரமங்கலம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.