‘புதுச்சேரியில் சிறு, குறு ஆலைகள் தொடங்க 3 ஆண்டுகளுக்கு அனுமதி தேவையில்லை – விரைவில் அரசாணை
புதுச்சேரி: ‘புதுச்சேரியில் சிறு, குறு தொழிற்சாலைகள் துவங்க மூன்று ஆண்டுகள் வரை அனுமதி தேவையில்லை. இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்’ என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தனியார் நிறுவனங்களின் மனித வள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் நமச்சிவாயம் பேசியது: “கடந்த காலங்களில் தொழில் துவங்குவோருக்கு 2017 முதல் ஊக்கத் தொகை தரப்படாமல் நிலுவையில் இருந்தது. அத்தொகையான ரூ.25 கோடி வரை தர நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது விண்ணப்பித்துள்ளோரில் ரூ.6 கோடி வரை தரப்படவுள்ளது. இத்தொகை 15 நாட்களில் தரப்படும்.
சிறப்பு பொருளாதார மண்டலம் சேதராப்பட்டில் உள்ள 750 ஏக்கர் இடம் எடுக்கப்பட்டது. மத்திய அரசு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் தந்து, தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசகர் நியமித்துள்ளோம். இது சர்வதேச தரத்தில் அமையும். ஆட்டோ மொபைல், ஐடி, பார்மா நிறுவனங்கள் வரும். அதிக வேலை வாய்ப்பு தருவதுடன் மாநிலத்துக்கு வருவாய், பொருளாதாரச் சூழல் உயர்த்தும் வகையில் நிறுவனங்களை கொண்டு வரவுள்ளோம்.
ஏ.எப்.டி உள்ளிட்ட மில்கள் மூடப்பட்டுள்ளன. அந்த இடங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். ஒற்றைச் சாளர முறையில் பிரச்சினையும் காலதாமதம் ஏற்படுவதாவும் தெரிவித்தனர். முதலில் சிறு, குறு தொழிற்சாலைகள் தொடங்க 3 ஆண்டு வரை அனுமதி தேவையில்லை. கொள்கை முடிவு எடுத்து ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். தொழில் தொடங்கிய பின்பு 3 ஆண்டுகளுக்குள் அனுமதி பெறலாம். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும். விரைவில் புதுவையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்” என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.