சயனக் கோலத்தில் அருளும் அனுமன் ஆலயம் எங்குள்ளது தெரியுமா?
நின்ற கோலத்தில், அமர்ந்த நிலையில் உள்ள அனுமனை கோயில்களில் வழிபட்டிருப்போம். வித்தியாசமான சயன கோலத்தில் காட்சி தரும் அனுமன் சில ஆலயங்களில் மட்டுமே காட்சி தருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், குல்தாபாத் என்ற ஊரில் பத்ரமாருதி ஆலயம் உள்ளது. முகலாயர்கள் காலத்தில் இப்பகுதி சொர்க்கத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்பட்டது. குல்தா என்றால் சொர்க்கம் என்று பொருள். மூலிகை மலையை அனுமன் இலங்கைக்கு தூக்கிச் சென்றபோது வழியில் இங்குள்ள மலையில் தங்கி சற்று ஓய்வெடுத்து கொண்டதாக ஐதீகம். புராண காலத்தில் பத்ராவதி என்ற பெயரால் இத்தலம் அழைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட மன்னன் பத்ரசேனன் இராமச்சந்திர மூர்த்தியின் தீவிர பக்தர்.
ஸ்ரீராமருக்கு இவர் ஒரு சிறிய ஆலயத்தை நிர்மாணித்தார். ஒரு நாள் மன்னர் பத்ரசேனரின் இராம நாம சங்கீர்த்தனத்தைக் கேட்ட அனுமன் தன்னை மறந்த நிலையில் படுத்து உறங்கிவிட்டார். சங்கீர்த்தனம் முடிந்ததும் தன் எதிரில் அனுமன் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டு அனுமன் விழிக்கும் வரை காத்திருந்தார். அனுமன் விழித்து எழுந்ததும் பக்தர்களுக்கு என்றென்றைக்கும் அருள்புரிகின்ற வகையில் அவர் இங்கேயே சயன கோலத்தில் அருள்பாலிக்க வேண்டும் என்றும் வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் அருள வேண்டும் என வேண்ட, அனுமன் அப்படியே ஆகட்டும் என வரமளித்தார்.
இவர் மன்னனுக்குக் காட்சி தந்ததால் பத்ரமாருதி எனும் திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். சனி கிரகத்தின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்க இங்குள்ள சனி பகவானையும் தரிசிக்கிறார்கள். ஆலயச் சுவர்களில் மாருதி பற்றிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதேபோல், உத்தரபிரதேசம் அலகாபாத்தில் சயனக் கோலத்தில் பெரிய உருவில் அனுமன் காட்சி தருகிறார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிந்த வாடாவிலுள்ள, ‘சாம் வலி’ எனும் ஊரில் பள்ளி கொண்ட அனுமன் கோயிலில் காட்சி தருகிறார்.