ரூ. 45.25 கோடிக்கு வாங்கப்பட்ட 2 ஆஸ்திரேலிய வீரர்கள்… ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரசியம்
துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் 2 ஆஸ்திரேலிய வீரர்கள் மொத்தம் ரூ. 45.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு வீரரும் ரூ. 20 கோடிக்கு வாங்கப்பட்டது கிடையாது. அந்த ரிக்கார்டை இந்த 2 ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று முறியடித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதையொட்டி மினி ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் முக்கிய ஆட்டக்காரர்களை அணியில் எடுப்பதற்கு கடும் போட்டியிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை வின்னிங் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ரூ. 20.50 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்திய நேரப்படி மதியம் 2.13-க்கு பாட் கம்மின்ஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற ரிக்கார்டை பாட் கம்மின்ஸ் ஏற்படுத்தியிருந்தார்.
ஏலம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை அணியில் எடுப்பதற்கு கொல்கத்தா மற்றும் குஜராத் அணி நிர்வாகம் ஆர்வம் காட்டின. ரூ. 10 கோடிக்கு மேல் இரு அணிகளும் போட்டி போட்டிக் கொண்டு ஏல தொகையை உயர்த்த, மற்ற அணி நிர்வாகிகள் பார்வையாளர்களாக மாறி, இருவரின் போட்டியை பார்த்துக் கொண்டேயிருந்தனர்.
ரூ. 20 கோடி வந்தவுடன் யாராவது ஒருவர் அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா அணி ரூ. 24.75 கோடி கொடுத்து மிட்செல் ஸ்டார்க்கை வாங்கிக் கொண்டது.
அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் ஏற்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இணைந்து மொத்தமாக ரூ. 45.25 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.