அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேரணியின்போது வானில் பறந்த அடையாளம் தெரியாத பொருளால் பரபரப்பு!
கடந்த 10ஆம் தேதி அன்று நடந்த ஒரு வினோதமான நிகழ்வில், லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் விமானப்படை 1-க்கு மேலே ஒரு விசித்திரமான அடையாளம் தெரியாத பொருள் வட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
DailyMail.com இந்த அசாதாரண சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மர்மமான பொருள் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பல முறை பறந்ததாகவும் பொதுமக்கள் பலரும் அதனை பார்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செய்தி நிறுவனம் அது குறித்தான படங்களையும் வெளியிட்டுள்ளது.
பொருளின் தன்மை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபேற்று வருகிறது. இரண்டு விமான ஆர்வலர்கள், ஜோசுவா மற்றும் பீட்டர் சோலோர்சானோ, ஒரே நாளில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு F-35 போர் விமானங்கள் வானத்தில் ரோந்து சென்றதை படம் பிடித்தனர். அதிபர் பைடனின் வருகைக்காக இந்த ஜெட் விமானங்கள் தற்காலிக விமானக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியதாக கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, அமெரிக்க நேரப்படி காலை சுமார் 10:18 மணிக்கு YouTube சேனல் LA Flights-ன் நேரடி ஒளிபரப்பானது மர்மமான இந்த வட்டப் பொருள் இருப்பதைக் கண்டறிந்தது. இந்த அடையாளம் தெரியாத பொருள் காணாமல் போவதற்கு முன் சுமார் மூன்று நிமிடங்கள் வட்டமிடுவதும், மீண்டும் தோன்றுவதுமாக பதிவாகியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், திரைப்பட இயக்குனர் ராபர்ட் வூட் தனது அனுபவத்தை DailyMail.com உடன் பகிர்ந்து கொண்டார். அவர் தனது நாயுடன் நார்த ஹாலிவுட்டில் நடைபயிற்சி செய்யும் போது ஒரு வெள்ளை தட்டு போல ஒரு அடையாளம் தெரியாத பொருள் பறந்ததை கண்டதாக கூறியுள்ளார். பொருளின் தன்மை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது உண்மையில் அது குறித்து தனக்கு தெரியவில்லை என கூறினார். அடையாளம் தெரியாத மர்ம பொருள் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.