இந்திய டி20 அணியில் விராட் கோலிக்கு புதிய பொறுப்பு.. பரிந்துரை செய்த டிராவிட்.. முடிவு எடுத்த ரோகித்
மும்பை : டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியில் பல மாற்றங்கள் நடைபெற உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனியர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு ஆண்டுக்கு மேல் எந்த வித டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தனர்.
ஆனால் தற்போது அவர்கள் அணிக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
இந்த மூத்த வீரர்கள் பல டி20 உலக கோப்பையில் விளையாடி ஒருமுறை கூட சாதிக்கவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் ராகுல் டிராவிட்டின் பரிந்துரையின்படி விராட் கோலிக்கு ஒரு புதிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்கு ரோகித் சர்மாவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
அதன்படி தொடக்க வீரராக ரோகித் சர்மா உடன் விராட் கோலி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விராட் கோலி ஆங்கரிங் ரோலிலும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக அதிரடியாகவும் விளையாட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரோகித் சர்மா குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிக்க முடியும். அதே போன்று விராட் கோலி கடைசி வரை களத்தில் நின்று சாதிக்க முடியும்.
விராட் கோலி, ரோகித் சர்மாவும் தொடக்கவீராக களம் இறங்கினால் சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா,ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்களுக்கு நடுவரிசையில் வாய்ப்பு கிடைக்கும். எனினும் கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் எந்த இடத்தில் இறங்குவார்கள் என தெரியாது. மேற்கிந்திய தீவுகள் ஆடுகளம் தொய்வாக இருக்கும். இதனால் முதல் ஐந்தாறு ஓவர்களில் பெரிய அளவில் ரன் சேர்க்க வேண்டும்.