IND vs AFG : தந்தையின் கடமையில் தவறாத கிங்.. விராட் கோலி விலகலுக்கு இதுதான் காரணம்.. என்ன தெரியுமா?
மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடக்கவுள்ளது. மொஹாலி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, சேஸிங் செய்யும் அணிகளே வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் அதிக பனிப்பொழிவு இருப்பதால், பேட்ஸ்மேன்களுக்கு மொஹாலி பிட்ச் சொர்க்கமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று தெரிவித்தார். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போதும், ஜொகன்னஸ்பர்க் வந்துவிட்டு விராட் கோலி திடீரென லண்டனுக்கு புறப்பட்டார்.
குழந்தை பிறப்புக்கு பின் விராட் கோலியின் மனநிலை மொத்தமாக மாறியது என்றே சொல்லலாம். ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி, அதன்பின் மகள் வந்ததையடுத்து குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்க தொடங்கினார். பொருளாதார ரீதியான முன்னேற்றத்திலும் கவனம் செலுத்திய விராட் கோலியின் மாற்றத்திற்கு அவரின் மகளே முக்கிய காரணம் என்று பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தனது குழந்தையின் 3வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகவே விராட் கோலி, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் விராட் கோலி அவரின் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.