என்னாது ஒழுங்கு நடவடிக்கையா.. நீங்க சொல்ற மாதிரியெல்லாம் கிடையாது.. ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படாதது குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடருக்கான அணி தேர்வில் இருந்தே சர்ச்சை தொடங்கியது. ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர்களாக ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே காரணமாக பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் உடனடியாக நாடு திரும்பி ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் விலகினார். இதன்பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்று கூறிவிட்டு, துபாயில் முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடினார். இதனால் இஷான் கிஷன் மீது பிசிசிஐ அதிகாரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியது.