Shahrukh Khan: விமானத்தில் தைய தைய்யான்னு ஆட ரெடி.. மணிரத்னம் படத்தில் நடிக்க கெஞ்சிய ஷாருக் கான்!
காதல் திரைப்படங்களை இயக்குவதில் ஐகான் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஷாருக்கான் – மனிஷா கொய்ராலா நடிப்பில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘உயிரே’.
இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்டது.
இப்படத்தில் இணைந்த ஷாருக்கான் – மணிரத்னம் கூட்டணி அதற்கு பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் இணையவில்லை. அந்த வகையில் இது குறித்து சுவாரஸ்யமான விவாதம் ஒன்று சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறியது.
பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருதுகளை வழங்கி வருகிறது. அந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த இந்தியருக்கான விருது நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது.
அப்போது மேடையேறிய நடிகர் ஷாருக்கான் “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக கசப்பான அனுபவங்களையும் சோதனைகளையும் சந்தித்து வந்தாலும் என்னுடைய வேலையை மிகவும் நேர்மையாக மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்து வந்தேன்.
என்னுடைய பல படங்கள் தோல்வியை சந்தித்தன. அதனால் ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அதற்காக நான் கவலைப்படவில்லை. இருப்பினும் நான் கடினமாகவும், நேர்மையாகவும் உழைத்தேன். அந்த நேர்மைக்கு கிடைத்த பரிசாக இந்த விருதினை கருதுகிறேன்” என தெரிவித்தார்.
அந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் இயக்குனர் மணிரத்னமும் கலந்து கொண்டதால் நிகழ்ச்சி தொகுப்பாளர், ஷாருக்கானிடம் கேள்வி ஒன்றை முன்வைத்தார். இயக்குநர் மணிரத்னம் – ஷாருக்கான் கூட்டணி 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘உயிரே’ படத்தில் இணைந்து பணியாற்றினீர்கள். அடுத்து இருவரும் எப்போது இணைந்து படம் செய்வீர்கள்? எனக் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் ” மணி சார் நீங்களே சொல்லுங்க, இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லணும்னு” எனக் கேட்டார். தொடர்ந்து, “நான் பல முறை உங்களிடம் தனிப்பட்டமுறையில் முறையில் என்னை வைத்து இயக்குங்கள் என கேட்டுவிட்டேன். இப்போது இந்த கேள்வி பொது இடத்துக்கே வந்துவிட்டது. உங்களிடம் கோரிக்கை வைத்தேன் இப்போது கெஞ்சி கேட்கிறேன். நீங்கள் சொன்னால் ட்ரெயின் மீது மட்டும் அல்ல பிளேன் மீது கூட ஏறி தைய்யா தைய்யா என ஆட தயாராக இருக்கிறேன்” என்றார்.
அதற்கு மணிரத்னம் “நீங்க சொந்தமா ஒரு பிளேன் வாங்கும் போது நிச்சயமா பண்ணிடலாம்” என கூறினார். அப்பவும் அவரை விடாத ஷாருக்கான் “மணி, சமீப காலமா என்னோட படம் எப்படி போகுது தெரியுமா? அதனால் பிளேன் வாங்குவது எல்லாம் ரொம்ப தூரத்தில் இல்லை. அதனால ஐ ஆம் கம்மிங்” என கலகலப்பாக பதிலளித்தார்.