தமிழகத்தின் இந்த மாவட்டத்திற்கு வந்த ரூ2 ஆயிரம் கோடி முதலீடு! சிட்ரோன் செய்த மாஸ் சம்பவம்!
சிட்ரோன் என்ற கார்களை தயாரிக்கும் நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 2000 கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசுடன் நிறுவனம் கையெழுத்து செய்துள்ளது. இந்த புதிய முதலீட்டின் மூலம் என்னென்ன தயாரிப்புகள் எல்லாம் செய்யப்போகிறது. இந்த புதிய முதலீட்டை எப்படி செலவு செய்யப்போகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
சென்னையில் தமிழக அரசு சார்பில் தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சியின் பலனாக உலகம் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டிற்கு வந்து தமிழகத்தில் என்னென்ன வகையில் எப்படியான முதலீடு செய்யப் போகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.
ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகிறது. இந்த இப்படியாக தமிழகத்தில் ஏகப்பட்ட நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை செய்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் சிட்ரோன் என்ற பிராண்டில் வாகனங்களை தயார் செய்து வரும் ஸ்டெல்லாண்டீஸ் குரூப் நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 2000 கோடியை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் தனது ஆலையை அமைத்து சிட்ரோன் பிராண்டின் கார்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது இந்த ஆலையை விரிவாக்கவும் புதிய தயாரிப்புகளை கொண்டு வரவும் ரூபாய் 2000 கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிட்டு அதற்காக தமிழக அரசுடன் புரிந்து கொள்வது ஒப்பந்தத்தையும் கையெழுத்து செய்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் 1250 கோடி முதலீட்டில் தனது ஆலையை துவங்கியது. 2021-ம் ஆண்டு தான் தனது முதல் தயாரிப்பை வெளியிட்டது. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் வளர்ந்து வரும் கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் நிலையில். தற்போது புதிய முதலீட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த புதிய முதலீட்டை நிறுவனம் தற்போது இருக்கும் ஆலைக்கான செலவினங்களுக்காகவும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிக்காகவும் செலவிட முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் இந்த ஆலை அமைந்திருக்கும் பகுதியில் பொருளாதாரம் மேம்பாடு சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டை வைத்து கம்பஷன் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு திறனை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்நிறுவனத்தின் சிஇஓ ஆதித்யா ஜெயராஜ் கூறும் போது: ” சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் எவ்வளவு முக்கியத்துவம் காட்டுகிறது என்பதை இந்த முதலீடு மூலம் தெரிய வருகிறது. தமிழ்நாடு தொடர்ந்து எங்கள் தொழிலுக்கு சிறப்பான உத்வேகத்தை அளித்து வருகிறது. மாநில அரசின் சப்போர்ட் மூலம் எங்கள் தயாரிப்புத்திறனை அதிகப்படுத்தியுள்ளோம். தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
சர்வதேச அளவில் எங்கள் பிராண்டை சிறப்பான பிரண்டாக மாற்றவும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் எங்களை கொண்டு செல்லவும் எங்கள் நிறுவனம் சிறப்பான முனைப்புகளை எடுத்து வருகிறது. அதற்கு தமிழக அரசு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறது. இதற்கான கட்டுமான வசதிகள் முறைப்படுத்துவதற்கான உதவி தொழில் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறது” என கூறினார்.
சிட்ரோன் நிறுவனம் முதன்முதலாக கடந்த 2021 ஆம் ஆண்டு சி5 ஏர்கிராஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சி3 காரை அறிமுகப்படுத்தியது. பின்னர் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இசி 3 காரை அறிமுகப்படுத்தியது. தற்போது நிறுவனம் சி3 எக்ஸ் என்ற கிராஸ் செடான் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.