பணிவின் இலக்கணம் அனுமன்!
சர்வ வல்லமை படைத்தவர் அனுமன். அவருடைய ஆற்றல்கள் அளப்பரியது. ஆஞ்சனேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் போற்றப்படுகிறார்.
அனுமனுக்கு மிகுந்த புத்திக் கூர்மை, தைரியம், பலம் போன்ற அம்சங்களுடன் பணிவு என்ற உயர்ந்த குணமும் இருக்கிறது. அவரை வழிபடுபவர்களுக்கு அறிவு, பலம், தைரியம், நம்பிக்கை, வெற்றி, ஆற்றல் என எல்லாவற்றையும் தருவார். சிறந்த கல்விமான், ஆனாலும் பணிவு மிக்கவர். பிறர் நலமே தன்னுடைய நலம் என்று நினைப்பவர். மிகுந்த தூய்மையான பக்தியுடன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்தவர். ராம நாமத்தை ஜபிக்கும்போதெல்லாம் அங்கே அனுமனும் வந்து விடுகிறார் என்பது இன்றளவும் உள்ள நம்பிக்கை. சிரஞ்சீவியாக எல்லா காலங்களிலும் வாழ்கிறார் ஆஞ்சனேயர்.
இத்தனை சிறப்புகள் மிகுந்த அனுமனின் மிகச் சிறந்த குணம் பணிவு. அவர் ஒருபோதும் தன் அளப்பரிய ஆற்றல்களால் ஆணவமோ, பெருமையோ அடைந்தவரில்லை. அவர் முதன் முதலில் சீதா தேவியை பார்க்க ஸ்ரீராமனின் தூதராக இலங்கைக்கு சென்றபோது, எடுத்த எடுப்பில் போய் ‘நான்தான் அனுமன், ஸ்ரீராமனிடம் இருந்து வந்திருக்கிறேன்’ என்றெல்லாம் கூறவில்லை. அத்தனை பெரிய பராக்கிரமசாலியாக இருந்தாலும் ஒரு மரத்தின் பின் அமர்ந்து ஸ்ரீராம நாமத்தை ஜபித்தார். அதைக் கேட்டு சீதையின் கவனம் அவர்பால் சென்றது. அதன் பின்னரே தன்னை ஸ்ரீராம பக்தன் என்று அறிமுகம் செய்துகொள்கிறார். ‘தான் ஸ்ரீராமனின் தூதுவன்’ என்கிறார் பணிவுடன்.
பல அளப்பரிய செயல்கள் செய்து சீதையை மீட்டதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. அதேபோல, லக்ஷ்மணன் மூர்ச்சையாக விழுந்ததும் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்த பெருமான் அவர். அவருடைய அவ்வளவு பலமும் ஆற்றலும் இருந்தாலும் பணிவின் இலக்கணமாக திகழ்கிறார் அனுமன்.
பல கோயில்களில் அனுமனின் திருவுருவச் சிலை இரு கைகளையும் கூப்பியவாறு, வணங்கிய நிலையிலேயே இருப்பதை பார்த்திருப்போம்.