தென்காசி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை மது குடிக்க வைத்து நகைகளை பறித்துச் சென்ற 6 பேர் கைது
தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்துள்ளார். தனது வேலையை முடித்துவிட்டு ஆலங்குளம் ஜோதிநகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மது வாங்கி கொண்டு அருகிலுள்ள காட்டு பகுதிக்கு சென்று அங்கு உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது 3 பேர் விஜயன் அருகில் வந்து உட்கார்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்கள் விஜயனிடம் பேச்சுக்கொடுத்து சேர்ந்து குடிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் நன்று பேசி விஜயனை மேலும் குடிக்க வைத்துள்ளனர். தொடர்ந்து விஜயனுக்கு நல்ல போதை ஏறியுள்ளது.
அப்போது அவரை காட்டுப் பகுதிக்குள் உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு திடீரென மேலும் 3 பேர் வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து 6 பேரும் சேர்ந்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயன் கழுத்தில் வைத்துக் கொண்டு கழுத்தில் இருந்த 22 கிராம் செயின், கை செயின் 20 கிராம் ஆகியவற்றை பறித்தனர். தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தை இருந்த பெட்டியை உடைத்து அதில் இருந்த அவரது மகனின் 120 கிராம் வெள்ளி கொடி, 40 கிராம் எடை கொண்ட 2 வெள்ளி கை செயின், ரொக்கம் 60 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். அதோடு அவரது மோட்டார் சைக்கிள் சாவியையும் எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி உள்ளது.
இச்சம்பவம் குறித்து விஜயன் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார், அப்புகாரில் தன்னிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனிடையே விஜயன் தன்னுடன் சேர்ந்து மது குடித்த 2 பேருடன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் அவரிடம் நகைகளை பறித்து சென்ற நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஆலங்குளத்தை அடுத்துள்ள மாறாந்தையை சேர்ந்த அழகு சுந்தரம் (32), சூர்யா (25), பேச்சிமுத்து (24 ), நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரை சேர்ந்த சுதாகர் (19), வீரவநல்லூரை சேர்ந்த முருகேசன் (20 ), கள்ளத்தி குளத்தை சேர்ந்த மகேஷ் (28 ) ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் 6 பேரும் கூட்டாளிகளாக சேர்ந்து திட்டமிட்டு விஜயனிடம் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த ஆலங்குளம் போலீசார் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளை மீட்டு குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.