‘ஓசி’.. காதலிக்காக ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி.. காதலி யார் தெரியுமா
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தி தனது காதலியை வீட்டில் ‘டிராப்’ செய்வதற்காக ரயிலில் டிக்கெட் இன்றி 11 மணிநேரம் பயணித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி அவரே கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இவரது மனைவி பெயர் சுதா மூர்த்தி. இந்த தம்பதியின் மகள் அக்சதா மூர்த்தி. அக்சதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் தான் பிரிட்டன் பிரதமராக உள்ளார்.
இந்நிலையில் தான் நாராயணமூர்த்தி உலகளவில் புகழ்பெற்ற நபராக இருக்கிறார். அவர் கூறும் ஒவ்வொரு கருத்துகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி கூறிய கருத்து என்பது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, ‘இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. ஒருநாளைக்கு 8 மணிநேரம் தான் வேலை. வாரத்தில் ஒருநாள் விடுப்பு என்ற நடைமுறை இந்தியாவில் உள்ள நிலையில் அவரது இந்த கருத்தை பலரும் விமர்சிக்க தொடங்கினர். இது பெரிய அளவில் விவாதமாக மாறியது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது நாராயணமூர்த்தி தனது மனைவி சுதா மூர்த்தியுடன் தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தனது இளமைக்கால காதல் பற்றியும், அப்போது அவர் செய்தது பற்றியும் சுவாரசியமாக பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியின்போது அவரிடம், ”உங்களின் காதலியை வீட்டில் விட்டு வருவதற்காக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் 11 மணிநேரம் பயணம் செய்தீர்களே. இது எப்படி நடந்தது” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நாராயணமூர்த்தி சிரித்தபடி, ”அந்த நாட்களில் நான் காதலில் இருந்தேன்” என அவர் கூற அருகே இருந்த சுதா மூர்த்தி ”இல்லை.. ஒருபோதும் இல்லை” என பதிலளித்து முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும் விடாத நாராயணமூர்த்தி, ”நான் அப்போது காதலில் இருந்தேன். நான் என்ன பேசுகிறேன் என்பது உங்ளுக்கு தெரியும். உடலில் ஹார்மோன்கள் உதைக்கும். அது எப்படி என்று உங்களுக்கு தெரியும்” என்றார். இதனை கேட்ட சுதா மூர்த்தி தனது முகத்தை கைகளால் மறைத்து வெட்கப்பட்டார்.