`நான் ஒரு மிளகாய் பிரியன்…’ உலகின் அதிக காரமான 10 மிளகாய் சாப்பிட்டு கின்னஸ் சாதனை!
காரத்திற்காக சமையலில் பயன்படுத்தப்படும் மிளகாயை தெரியாமல் மென்றுவிட்டாலே கண்களில் கண்ணீர் வந்துவிடும்.
அதுவே காரணமான மிளகாயாக இருந்தால் அவ்வளவு தான்.
உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என்று அறியப்படும் 10 பூட் ஜோலோகியா மிளகாயை (Bhut Jolokia Chillie) 30.1 வினாடிகளில் சாப்பிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர் என்பவர் கின்னஸ் சாதனை படைத்தது இருக்கிறார்.
காரமான உணவை விரும்பும் கிரெக் தனது வீட்டில் மிளகாயை வளர்க்கிறார். பல ஆண்டுகளாகக் காரமான உணவைச் சாப்பிட்டு தனது சகிப்புத்தன்மையை அதிகரித்து இருக்கிறார்.
ஏனெனில் பூட் ஜோலோகியா மிளகாய் அதீத காரத்தன்மை உடையது. பூட் என்ற வார்த்தைக்கு பேய் என்ற அர்த்தமாம். இந்த மிளகாயை சாப்பிடுகையில், அதன் காரம் ஒரு பேயைப் போலத் தோன்றுமாம். இதன் காரணமாகவே பூட்டியஸ் மக்கள் இப்பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.
அவர் 10 மிளகாயை அசால்டாக சாப்பிடும் காட்சிகள் கின்னஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மிளகாயாக அவர் சாப்பிட்டு முடித்துவுடன் இறுதியில் தனது நாக்கை வெளியே நீட்டிக் காட்டுகிறார். அவர் சாப்பிடும் போது பிறர் கண்களில் கண்ணீர் வந்துவிடும் போல இருக்கிறது.
சாதனை படைத்த அப்போதே அவருக்கு கின்னஸ் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. சாதனை படைத்த கையோடு கிரெக் கூறுகையில், “இது எனது தனிப்பட்ட சவால். இந்த சாதனை மிளகாய் மீது எனக்கு இருக்கும் காதலையும், என்னால் எவ்வளவு தூரம் வரை அவற்றைச் சாப்பிட முடியும் என்பதையும் காட்டுகிறது.
ஒரு மிளகாய் பிரியர் என்ற முறையில், சூப்பர் ஹாட் மிளகாய் பற்றிய விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் மேம்படுத்த முயற்சிக்கிறேன். நான் மேலும் முயற்சி செய்வதையும், மிளகாய் சாப்பிடுவதையும் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
காரமான மிளகாயைச் சாப்பிட்டது கிரெக்கின் முதல் கின்னஸ் சாதனையல்ல. இவர் டிசம்பர் 2021-ல் மூன்று கரோலினா ரீப்பர் மிளகாயை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நவம்பர் 2021-ல் `ஒரு நிமிடத்தில் அதிக புட் ஜோலோகியா மிளகாயைச் சாப்பிட்டவர்’ என்ற கின்னஸ் சாதனை படைத்தார்.
2017 -ல் ஒரு நிமிடத்தில் கரோலினா ரீப்பர் மிளகாயை மொத்தமாக120 கிராம் சாப்பிட்டு மற்றொரு சாதனையைப் படைத்தார். தொடர்ச்சியாகக் காரமான மிளகாயை சாப்பிட்டு கிரெக் சாதனை படைத்து வருகிறார்.
கண்களில் நீர் ததும்பும் காரமான உங்களது சாதனைக்கு வாழ்த்துகள் கிரெக்!