ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்ஸரை விட்டுக் கொடுக்கிறதா டாடா.. கைப்பற்றும் பிரபல ஐடி நிறுவனம்
அடுத்த 5 ஆண்டுக்கான ஐபிஎல் டைடில் ஸ்பான்சரை இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா-விடம் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தட்டிப் பறிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் துபாயில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 72 வீரர்கள் 234.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 2024 முதல் 2028 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டைடில் ஸ்பான்சரை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது.
உலகம் முழுவதும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றான ஐபிஎல் தொடருக்கு டைடில் ஸ்பான்சர்ஷிப் செய்வதன் மூலம் உலகளவில் தங்களது நிறுவனத்திற்கு பிரபலம் கிடைக்கும் என்பதால் இந்த டைடில் ஸ்பான்சர்ஷிப்பை பெற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், முன்னணி ஐடி சேவை நிறுவனம் ஒன்று ஐபிஎல் டைடில் ஸ்பான்சர்ஷிப்பை பெற தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் டைடில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், 2024 முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான டைடில் ஸ்பான்சரை தட்டிப் பறிக்க NTT Data என்ற நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐடி சேவையை வழங்கி வருகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் பிரபலமான இண்டி கார் சீரியஸ் மற்றும் உலகளவில் பிரபலமான சைக்கிள் பந்தய போட்டிகளுக்கு டைடில் ஸ்பான்சராக இந்நிறுவனம் இருந்துள்ளது.
ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ 2023ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இந்தியா – சீனா எல்லை பிரச்னை காரணமாக ஐபிஎல் டைடில் ஸ்பான்சரில் இருந்து விவோ நிறுவனம் விலகியது. அதன்பின், ஐபிஎல் டைடில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் இருந்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் ஐபிஎல் டைடில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தொடருமா என்பது விரைவில் தெரிய வரும்.