பாகற்காய் கசப்பே தெரியாமல் எப்படி பொரியல் செய்யலாம்..? இதோ ரெசிபி…

சத்துக்கள் நிறைந்த பாவக்காயை அதன் கசப்பு தன்மை காரணமாக பலரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். பொதுவாக பல நன்மைகளை கொண்டுள்ள பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

பாகற்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கு உதவும். குறிப்பாக நிறைய இனிப்பு சாப்பிடும் குழந்தைகளுக்கு. ஆனால் பாகற்காய் கசக்கும் என்பதிற்க்காக குழந்தைகள் இதை விரும்பி சப்பிடமாட்டார்கள்.

பொதுவாக பாகற்காயை புளி, தயிர் மற்றும் தேங்காய் ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கிறார்கள். ஆனால் இதை பருப்புடன் சேர்த்து சமைக்கும்போது அதன் கசப்புத்தன்மை மறைந்துவிடும். துவரம் பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து எப்படி பாகற்காயை கசக்காமல் சமைக்கலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

பாகற்காய் – 2

புளிக்கரைசல் – முக்கால் கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

தேங்காய் – ஒரு கப் துருவியது

துவரம் பருப்பு – ஒரு கப்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

வெல்லப்பொடி – 3 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 4

பச்சை மிளகாய் – 3

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை :

முதலில் பாகற்காயை அலசி அதன் விதைகளை நீக்கி தேவையான அளவு வட்டமாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து குக்கரில் எண்ணெய், பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பருப்பை நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பு : பருப்பை வேக வைப்பதற்கு முன் அரைமணி நேரம் ஊறவைத்தால், அது எளிதாக வெந்துவிடும்.

பிறகு கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்து ஆகியவற்றை சேர்த்து அதனுடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் பொன்னிறமாக சிவந்தவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அனைத்தும் நன்கு வதங்கியவுடன் புளிக்கரைசல் சேர்த்து வதக்கி பின்னர் வெல்லப்பொடி சேர்த்து கலந்துவிட்டு அதனுடன் வறுத்த பாகற்காய்களை சேர்க்க வேண்டும்.

அவற்றை நன்கு கிளறிவிட்ட பிறகு அதில் வேகவைத்த பருப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

இவற்றை அடுப்பில் இருந்து இறக்குவத்திற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவவேண்டும்.

இந்த பாகற்காய் பருப்பு கூட்டை அனைத்து விதமான சாதத்துடனும் சேர்த்து பரிமாறலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *