ரூ.3 லட்சத்து 80,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை வழிநடத்தும் அசோக் வி வாஸ்வானி
உழைப்பு ஒன்றே உயர்வுக்கு பிரதானமானது என்பதை விளக்கும் விதமாக இங்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்து வருகிறது. அப்படி தான் லண்டனில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர், நம் நாட்டில் 3 லட்சத்து 80ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை வழிநடத்தி வருவது உங்களுக்குத் தெரியுமா? அவர் பெயர் தான் அசோக் வி வாஸ்வானி.
வங்கி தொழிலில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திய கோட்டக் மஹிந்திரா வங்கியின் (Kotak Mahindra Bank) தலைமை செயல் அலுவலராக பொறுப்பு வகிக்கிறார். இன்னும் மூன்று வருட காலம் இந்த பதவியில் இவர் நீடிப்பார். வாஸ்வானி லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டனின் உலகளாவிய வங்கியான பார்க்லேஸில் பணிபுரிந்தார்.
இவர் மும்பையில் உள்ள சிடன்ஹாம் (Sydenham) வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். வாஸ்வானி பகாயா டெக்னாலஜிஸ் லிமிடெட் எனும் அமெரிக்க – இஸ்ரேலிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக வங்கி பணிகளில் சிறந்த விளங்கியதற்கான ஆதாரங்களை தன் பெயருடன் இணைத்துள்ளார் வஸ்வானி.
ஆரம்பத்தில் சிட்டி வங்கி குழுமத்திலும், சமீபத்தில் பார்க்லேஸிலும் என இவரது பதிவுசெய்யப்பட்ட சாதனை பட்டியல் நீண்ட நெடியதாக உள்ளன. இவர் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குழுமம், பிரிட்டனின் எஸ்பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றின் தலைமை குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் ஒரு தகுதி வாய்ந்த பட்டய கணக்காளரும், நிறுவன செயலாளரும் ஆவார். இவரது குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரையில் வீணா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
கோட்டக் மஹிந்திரா வங்கியில் பொறுப்பேற்கும் முன், இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில், தலைமை நிர்வாக அலுவலராக இவர் பணிபுரிந்துள்ளார். அதில், வங்கியின் உலகளாவிய நுகர்வோர், தனியார், கார்ப்பரேட் மற்றும் பேமெண்ட்ஸ் வணிகங்களின் தலைமை நிர்வாக அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். ஜனவரி 1, 2024 நிலவரப்படி கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.3,80,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்டதாக இருந்தது.
இதை தற்போது வஸ்வானி தலைமை பொறுப்பில் இருந்து வழிநடத்துவார். இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியாகத் திகழும் கோட்டக் மஹிந்திரா, 31 மார்ச் 2023 நிலவரப்படி 1,780 கிளைகளையும், 2,963 ஏடிஎம் இயந்திரங்களையும் கொண்டுள்ளது. சாதார கடன் வழங்கும் நிதி நிறுவனமாக 1985ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வங்கி, தற்போது பெரும்பாலான அனைத்து வங்கி சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.