ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னி பற்றி தெரியுமா? அப்படி என்ன இதுல இருக்கு? இந்த சட்னியை செய்வது எப்படி?

Odisha’s Red Ant Chutney: ஒடிசாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், அங்கு மிகவும் பிரபலமான மற்றும் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சிவப்பு எறும்பு சட்னிக்கு சமீபத்தில், அதாவது 2024 ஜனவரி 2 ஆம் தேதி புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்பு எறும்பு சட்னி ஒடிசாவின் பழங்குடியின மக்களால் அதிகம் தயாரித்து உட்கொள்ளும் ஒரு வகையான உணவாகும்.

பழங்காலத்தில் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை மக்கள் தங்களின் ஆரோக்கியத்திற்காக உட்கொண்டு வந்தனர். காலப்போக்கில் அவற்றில் பல மறைந்தாலும், இன்னும் ஒடிசாவின் பழங்குடியின மக்கள் பார்த்தாலே அச்சுறுத்தும் சிவப்பு எறும்புகளைக் கொண்டு சட்னியைத் தயாரித்து உட்கொண்டு வருகின்றனர். இந்த சிவப்பு எறும்பு சட்னி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தது. பழங்காலம் முதலாக இன்று வரை அவர்களின் சமையல் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய அங்கமாக இந்த சட்னி இருந்து வருகிறது.

இப்போது இந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு பயன்படுத்தும் எறும்பு மற்றும் அந்த சட்னிக்கு தேவையான பொருட்கள், அதன் செய்முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

சிவப்பு எறும்புகள்

சிவப்பு எறும்பு சட்னிக்கு பயன்படுத்தப்படுவது “Oecophylla Smaragdina” என்ற ஒரு வகையான சிவப்பு நெசவாளர் எறும்புகள் தான். இந்த எறும்புகள் ஒடிசாவின் மயூர்பஞ்ச் காடுகளில் தவிர, சிமிலிபால் காடுகள், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் வனப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த வகை எறும்புகள் மிகுந்த வலியை ஏற்படுத்தும் வகையில் கடிக்கக்கூடியவை. சில சமயங்களில் இந்த எறும்புகள் தோலில் வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் இந்த வகை எறும்புகளை சேகரித்து விற்பதோடு, சட்னியாகவும் விற்று வாழ்ந்து வருகிறார்கள். இந்த எறும்புகள் மற்றும் அவற்றின் முட்டைகள் கூடுகளில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்டு, சுத்தம் செய்த பின் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிவப்பு எறும்பு சட்னியை ஒடிசாவில் மட்டுமின்றி, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் காணலாம்.

சிவப்பு எறும்பு சட்னிக்கு தேவையான பொருட்கள்:

* சிவப்பு எறும்புகள் – 2 கப்

* துருவிய தேங்காய் – 1 கப்

* வரமிளகாய் – 4-5

* உப்பு – சுவைக்கேற்ப

* பூண்டு – 4 பல்

* புதினா இலைகள் – சிறிது

* கொத்தமல்லி இலைகள் – சிறிது

சிவப்பு எறும்பு சட்னியின் செய்முறை:

* முதலில் சிவப்பு எறும்புகளை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் அதில் புதினா, துருவிய தேங்காயை சேர்த்து அரைக்க வேண்டும்.

* பின்பு வரமிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து அரைத்தால், சிவப்பு எறும்பு சட்னி தயார்.

சிவப்பு எறும்பு சட்னியின் ஆரோக்கிய நன்மைகள்

சிவப்பு எறும்பு சட்னி அதன் தனித்துவமான சுவையைத் தவிர, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. முக்கியமாக இந்த சட்னியில் புரோட்டீன், கால்சியம், ஜிங்க், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வளமான அளவில் உள்ளன.

முக்கியமாக இந்த சட்னி மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. அதோடு இது மனச்சோர்வு, உடல் களைப்பு மற்றும் ஞாபக மறதி போன்றவற்றையும் சரிசெய்வதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *