ராமர் கோயில் திறப்பு விழாவை காங். புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும் செயல்: வானதி சீனிவாசன்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும் செயல் என, காங்கிரஸுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்துள்ளார்.
ஸ்ரீராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது, 100 கோடிக்கும் அதிகமான நாட்டு மக்களின் பல நூற்றாண்டு கால கனவு. அதனால்தான், காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், முக்கிய பிரமுகர்களுக்கும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பிதழ்களை வழங்கியது.
காங்கிரஸ் கட்சி, ஸ்ரீராமர் கோயில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நிகழ்ச்சி நிரல் எனக் கூறி கும்பாபிஷேக அழைப்பிதழை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது.
சட்ட ரீதியாக, யாருடைய எதிர்ப்பும் இல்லாமல், அனைவரின் ஆதரவோடு, அனைத்துத் தரப்பினரும் பெரு மகிழ்ச்சி அடையும் வகையில் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. எது நடக்கவே நடக்காது என நினைத்தார்களோ அதை பிரதமர் நரேந்திர மோடி சாதித்துக் காட்டியுள்ளார்.
மீண்டும் ஸ்ரீராமர் பேரலை நாடெங்கும் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே, காங்கிரஸின் இந்த புறக்கணிப்பு காட்டுகிறது. ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை நிராகரிக்கிறோம் என்பது 100 கோடிக்கும் அதிகமான இந்துக்களை அவமதிக்கும் செயல். ஆணவத்தின் வெளிப்பாடு.
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸின் உண்மையான தலைமை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.