பிரதமர் மோடி மீதான பகையால் கடவுளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது: பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி
பிரதமர் மோடி மீதான பொறாமை, பகை மற்றும் தாழ்வு மனப்பான்மை காரணமாக கடவுளையும் எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் சென்றுவிட்டதாக பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியுள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி மற்றும்ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் மரியாதையுடன் மறுத்துவிட்டனர். இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக அயோத்தி ராமர் கோயில் உள்ளது. ஆனால் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளுக்கு தீவிர போக்கு மனநிலைதான் மிக முக்கியமானதாக இருக்கிறது. அயோத்தி வழக்கை தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டு விழாவில் கலந்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் இந்த விழாவை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நாட்டின் வரலாற்று சிறப்புமிக்கதருணங்களிலும் தடையை ஏற்படுத்துவது முக்கிய எதிர்க்கட்சியின் வழக்கமாக உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெறும்போதெல்லாம், அதற்கு துணை நிற்பதற்கு பதில் காங்கிரஸ்புறக்கணிக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம், ஜிஎஸ்டி அமலாக்கம், நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர்களின் உரை ஆகியவற்றை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆட்சியில் இருந்து மக்கள் அகற்றிவருகின்றனர். முந்தைய தவறுகளில் இருந்து சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தும், அவற்றை காங்கிரஸ் வீணடித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் விழாவை பாஜக, ஆர்.எஸ்.எஸ்அமைப்பும் நடத்துவதாக காங்கிரஸ் கூறுவது தவறு. கோயிலில் பக்தர்கள் இடையே எந்த பிரிவும் இல்லை. கோயில் விழாவை எந்த அமைப்புடனும் தொடர்பு படுத்தக் கூடாது. மகாத்மா காந்தியின் ராம ராஜ்ஜிய கொள்கையை காங்கிரஸ் கைவிட்டுவிட்டது. 500 ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின் ராமர் கோயில் கட்டப்பட்டு, நாட்டுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சுதான்சு திரிவேதி கூறியுள்ளார்.