மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: தாமிரபரணியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பதிவாகியுள்ளது. தாமிரபரணியில் தொடர்ந்து 5,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் மட்டும் 146 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுபோல் ஊத்து பகுதியில் 125, காக்காச்சியில் 118, மாஞ்சோலையில் 89 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
அம்பாசமுத்திரம், சேரன்மகா தேவி, கொடுமுடியாறு அணை- தலா 7, மணிமுத்தாறு- 6.80, நாங்குநேரி- 1.60, பாளையங் கோட்டை, திருநெல்வேலி- தலா 2, பாபநாசம்- 8, சேர்வலாறு அணை- 9, கன்னடியன் அணைக்கட்டு- 8.20, களக்காடு- 5.40, நம்பியாறு அணை- 10.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,830 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2,552 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 115.69 அடியாக இருந்தது.
அணைக்கு 3,380 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 2,550 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மொத்தமாக அணைகளில் இருந்து தாமிரபரணியில் 5,000 கனஅடிக்குமேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளம் இரு கரை களையும் தொட்டு பாய்ந் தோடுகிறது.
தென்காசி மாவட்டத்தில் மழை ஓய்ந்திருந்தது. கடனா அணைப்பகுதியில் மட்டும் 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்திலுள்ள கடனா, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பியிருப்பதால் இந்த அணைகளுக்கு உள்வரத்தாக வரும் தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக கொட்டியது.