Captain Miller – பால் அபிஷேகம் முதல் பீர் அபிஷேகம்வரை.. கேப்டன் மில்லரை கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அவர் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியிருக்கிறது. அதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியானது. தெலுங்கு மார்க்கெட்டிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் தனுஷ். ஆனால் படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. அதற்கு காரணம் அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரிதான். ஏனெனில் அவரது மேக்கிங் வாத்தி படம் தெலுங்கு படமா இல்லை தமிழ் படமா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அதனாலேயே படத்துடன் ரசிகர்கள் ஒன்ற முடியாமல் தவித்தனர்.
கேப்டன் மில்லர்: வாத்தி படத்தின் தோல்விக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அருண் ஏற்கனவே ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இளம் தலைமுறை இயக்குநர்களில் அருண் மாதேஸ்வரனின் மேக்கிங்கும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கிறது. எனவே தனுஷுடன் அவர் சேர்ந்திருக்கும் கேப்டன் மில்லர் கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.
பொங்கல் ரிலீஸ்: இப்படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பீரியட் ஜானரில் உருவாகியிருக்கும் . இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படமானது இன்று வெளியானது.
அயலான் போட்டி: கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படமும் களத்தில் இறங்கியுள்ளது. எனவே இந்த பொங்கல் ரேஸ் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கேப்டன் மில்லர் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே ரசிகர்கள் கொடுத்துவருகிறார்கள். மேலும் வாத்தியில் விட்டதை தனுஷ் இதில் பிடித்துவிட்டார் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.
பீர் அபிஷேகம்: இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸை தனுஷ் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள். அதாவது புதுச்சேரி மாநில நடிகர் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டருக்கு எதிரே பிரமாண்டமாக கட் அவுட் வைக்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் பால் மற்றும் பீர் அபிஷேகம் செய்தார்கள். மேலும் ஊ தூவி, பூசணிக்காய் மற்றும் 108 தேங்காய்களை உடைத்து கொண்டாடினார்கள்.